ETV Bharat / state

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி; பணத்தைத் திருப்பிக் கேட்ட தாய், மகன் மீது தாக்குதல்; திமுக நிர்வாகியிடம் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 9:42 PM IST

Attack on mother and son in government job scam issue in Salem Police investigate DMK executive
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மணி பேட்டி

Dmk executive involved in attack: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் கொடுத்த நிலையில், வேலை வாங்கித் தராததால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட நபர், அவரது தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட மணி பேட்டி

சேலம்: கரியகோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலம்பட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் மணி (24). இவர் மயக்கவியல் துறையில் டிப்ளமோ (diploma in anesthesia) படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (23) என்பவர் இவரை அணுகி உள்ளார்.

சதீஷ் குமார், ஸ்டாலின் தன்னார்வ அமைப்பு என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். அதன் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி, ஐந்து லட்ச ரூபாயை மணியிடம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கி தற்பொழுது இரண்டு வருடங்கள் ஆகியும் அரசு பணியும் பெற்று தராமல், பணத்தையும் திருப்பி தராமல் சதீஷ்குமார் அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த மணி குடும்பத்தினர் கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வலியுறுத்தியுள்ளனர். இருந்தபோதிலும் சதீஷ் பணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து தெரிந்த நபர்களை வைத்து, பணத்தை திருப்பி கொடுக்குமாறு சதீஷ்குமார் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மணியை தொலைபேசியில் அழைத்த சதீஷ்குமார், பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும், தான் சொல்லும் இடத்திற்கு வந்து வாங்கிச் செல்லும் படி கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மணி அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் நேற்று சென்னையில் இருந்து 3 கூலிப்படை நபர்களை வரவழைத்து மணியை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9 மணி அளவில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மணி வீட்டிற்கு சென்று அவரை வெளியே அழைத்துள்ளனர்.

அப்பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முகத்தில் வெட்டுப்பட்ட மணி அலறியடித்து கொண்டு சரிந்து கீழே விழுந்துள்ளார். சத்தம் கேட்டு வீட்டின் வெளியே வந்த அவரது தாயார் மீதும் கூலிப்படையினர் சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலால் மணியும் அவரது தாயாரும் எழுப்பிய கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் வருவதைக் கண்ட கூலிப்படையினர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் மணியையும், அவரது தாயையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தாயையும், மகனையும் தாக்கிவிட்டு தப்பியோடிய கூலிப்படை நபர்களை பொதுமக்கள் இரவில் தேடினர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை வழிமறித்து விசாரித்தனர். அப்போது அந்த காரில் இருந்து மூன்று நபர்கள் தப்பி ஓடினர். காரை ஓட்டி வந்த சதீஷ்குமார் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சதீஷ்குமார், ஸ்டாலின் தன்னார்வ அமைப்பின் தலைவராகவும், திமுகவில் உறுப்பினராகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியதை நம்பி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் தாய் மற்றும் மகனை கூலிப்படையினரை வைத்து வெட்டிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. ஆய்வாளருக்கு ஆதரவாக போஸ்டர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.