ETV Bharat / state

உலோக சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி - சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணை

author img

By

Published : Feb 3, 2022, 6:09 PM IST

உலோக சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிர விசாரணை
உலோக சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தீவிர விசாரணை

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு உலோக சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகிக்கு வெளிநாடுகளில் தொடர்புள்ளதா என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஜக சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர் என்பவரையும்; காவலர்கள் இளங்குமரன், நாக நரேந்திரன் உள்ளிட்ட நான்கு பேரையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று (பிப் 02) கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஏழு உலோக சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அலெக்சாண்டர், இரண்டு காவலர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதான காவலர் இளங்குமரன் குறித்து விசாரணை நடத்தியபோது தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக ஹவாலா பணம், சிலைக் கடத்தல் போன்ற பெரும் குற்றங்களை செய்யும் நபர்களை பற்றி அறிந்து அவர்களிடம் இருந்து கொள்ளையடிப்பதை காவலர் இளங்குமரன் நீண்ட காலமாக செய்தது தெரியவந்துள்ளது.

தான் காவல் துறையில் இருப்பதை பயன்படுத்திக்கொண்டு, இதுபோன்று குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவலைப் பெற்று காவல் துறைக்குத் தெரியாமல் கொள்ளையடிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் செய்பவர்களிடமே கொள்ளை அடிப்பதால் காவல் துறையிடம் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில், இது போன்று செய்து வந்ததாக இளங்குமரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உலோக சிலைகளை விற்க முயற்சி

அருப்புக்கோட்டையில் காவலராகப் பணி புரிந்த இளங்குமரன், மதுரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது பழக்கமான ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன் தொடர்பு கிடைத்து, காவல் துறையில் பெரிதாக சம்பாதிக்க முடியவில்லை என்ற அடிப்படையில் இருவரும் கூட்டு சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த இளங்குமரனுக்கு, கருப்புசாமி என்ற கட்டுமான வேலைகளை செய்யும் நபர் மூலம் சேலம் எடப்பாடியில் சிலைகளை விற்க ஒருவர் முயல்வது தெரியவந்துள்ளது.

கட்டுமான வேலை ஒன்று சேலம் எடப்பாடியில் மேற்கொண்டிருக்கும்போது, இந்தத் தகவல் அறிந்து தன்னிடம் கருப்புசாமி தெரிவித்ததாகவும் இளங்குமரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் எடப்பாடியில் விலை உயர்ந்த உலோகச் சிலைகளை விற்கும் நபரிடம் இருந்து சிலைகளை அபகரிக்கத் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிலைகளை வாங்குவதுபோல் எடப்பாடியிலுள்ள சிலைகளை விற்கும் நபரிடம் பேசி, சிலை இருக்கும் வீட்டிற்குச் சென்று அபகரித்ததாக இளங்குமரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் என வாகனத்தை எடுத்துக்கொண்டு, சிலை இருக்கும் வீட்டை உடைத்து சிலைகளை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், அப்பகுதி மக்கள் காவலர் இளங்குமரன், கூட்டாளி நாகநரேந்திரன் உடன் வந்த மூவரையும் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

பதுக்கிவைக்கப்பட்ட சிலைகள் மீட்பு

போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய வாடகை வண்டியில் வந்ததால், மக்கள் சந்தேகமடைந்து தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் என போலியான அடையாள அட்டையைக் காண்பித்து ஊர் மக்களிடம் இருந்து தப்பித்து அந்த சிலைகளைக் கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள இந்த சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டு, பாஜக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி அலெக்சாண்டர் என்பவரை அணுகி விற்க ஒப்படைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கையில் வைத்திருந்த சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வரை, ராமநாதபுரம் கூரி சேத்தனார் என்ற கோயிலுக்கு பின்புறமாகவுள்ள கால்வாயில், பாஜக நிர்வாகி அலெக்சாண்டர் புதைத்து, மறைத்து வைத்திருந்ததை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் வீடு புகுந்து 5 லட்சம் ரூபாய் நகைப் பணத்தை கொள்ளையடித்த விவகாரத்தில் காவலர் இளங்குமரன் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளி வந்தபோது மீண்டும் சிலை கடத்தல் அலுவலர்களால் அவர் கைது செய்யப்பட்டார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்த அலெக்சாண்டர்

குறிப்பாக இளங்குமரன் ஹவாலா பணம் வைத்திருப்பவர்கள், சிலைக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகியோரைப் பற்றி தெரிந்து, அவர்களிடம் கொள்ளையடிப்பது மட்டுமல்லாது, ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து தொடர்பில் தான் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி அலெக்சாண்டர் உடன் தொடர்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

பாஜக நிர்வாகி அலெக்ஸாண்டர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகக் கூறி, பலரது நிலத்தை அபகரிக்க கட்டப்பஞ்சாயத்து செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்பு கிடைத்த காவலர்கள் இளங்குமரன், நாகநரேந்திரன் ஆகியோரை அடியாள்கள் போல் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

இதுபோன்று குற்றச்செயல்களில் ஈடுபடும் போதுதான் விலை உயர்ந்த தொன்மையான சிலைகளை சிலைக் கடத்தல் நபர்களிடம் இருந்து கடத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் எனக் கூட்டு சேர்ந்து திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

ஆனால், அதற்கு ஏற்றவாறு சந்தேகம் வராமல் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்க அரசியல் பதவி தேவைப்படும் என்ற அடிப்படையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியாக இருந்த அலெக்சாண்டர் பாஜகவில் சேர்ந்து மாவட்டச் செயலாளர் பொறுப்பு பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.

தீவிர விசாரணையில் காவல் துறை

பாஜகவில் இருந்து கொண்டு கோயில்கள் சிலை விற்பனைகள் தொடர்பான நபர்கள் தொடர்பு கிடைக்கும் என்ற அடிப்படையில், தன் வசம் இருக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள 7 உலோகச் சிலைகளை வெளிநாட்டுக்கு விற்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அலெக்சாண்டர் எவ்வாறு வெளிநாட்டில் உள்ளவர்களுக்குத் தொன்மையான சிலையை விற்க முயற்சி செய்தார் என்ற அடிப்படையில், அலெக்சாண்டர் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது செல்ஃபோனை பறிமுதல் செய்து அவர் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மேலும் இரண்டு அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிலைக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்காக காவல் துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வெள்ளி படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர், தீட்சிதர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.