ETV Bharat / state

தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு விரைவில் வரும்  - தருமபுரி எம்பி

author img

By

Published : Jul 17, 2021, 3:32 PM IST

தருமபுரி எம்பி செந்தில்குமார்
தருமபுரி எம்பி செந்தில்குமார்

கிடப்பில் உள்ள தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருவதாக தருமபுரி எம்பி செந்தில்குமார் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி அதியமான்கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தாலிக்கு தங்கம்

அப்போது, 123 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு, 984 கிராம் தாலிக்குத் தங்கமும், ரூ.30 லட்சத்து 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

மேலும் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பட்டதாரி பயனாளிகளுக்கு, 40 கிராம் தாலிக்குத் தங்கமும், என மொத்தம் 1.40 கிலோ தங்கமும், 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.


விரைவில் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி செந்தில்குமார், " தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து துறை அலுவலர்களைச் சந்தித்து பேசி வருகிறேன். தருமபுரி நகரப்பகுதியில் வரக்கூடிய 8 கிமீ., பாதை கட்டிடங்களாக உள்ளது. அதற்கு மாற்று பாதை அமைக்க கோரி இருக்கிறோம்.

மாற்றுப் பாதையை கண்டறிய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 கோடியே 50 லட்சம் ரூபாய், நில அளவீடு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.

பாஜக அரசியல் எடுபடாது

கொங்கு நாடு விவகாரத்தில் பாஜக பின்வாங்கி உள்ளதே என்ற கேள்விக்கு, "தமிழ்நாட்டில் பாஜக எக்காரணத்தைக் கொண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினைவாத மூலம் சிறிய சிறிய இலக்காக வைத்து செயல்படுத்த முயற்சி செய்தார்கள், அது எடுபடாத அரசியல்" என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.