ETV Bharat / state

பெண் காவலர் துன்புறுத்தல் குறித்து கனிமொழி பேச வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

author img

By

Published : Jan 3, 2023, 8:51 AM IST

பெண் காவலர் துன்புறுத்தல்.. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!
பெண் காவலர் துன்புறுத்தல்.. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சி பிரமுகரால் பெண் காவலர் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக கனிமொழி எம்பி பேச வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பக் கோரிக்கை வைக்கும் விதமாக நேற்று (ஜனவரி 2) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சென்னையில் கனிமொழி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பெண் காவலரை திமுகவின் இளைஞரணியில் இருக்கக்கூடிய இருவர் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

அவர்களை கைது செய்ய சென்ற காவலர்களையும் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு பெண் காவலர் மீது கை வைத்த அயோக்கியன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சர் மூச்சுக்கு 300 முறை இது திராவிட மாடல், இது திராவிடம் மாடல் அரசு என்று சொல்கிறார்.

திமுகவுக்கு வெட்கம், மானம் இல்லை. காவல் துறை நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் நன்றாக இருக்க முடியும். காவல் துறை கை கட்டப்படாமல் இருந்தால்தான். பெண்கள் சாலையில் நடக்க முடியும். கனிமொழி இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் சம்பவம் ஏதாவது நடந்தால் மைக் போட்டு பேசுவார்.

மத்திய பிரதேசத்தில் நடந்தாலும் பேசுவார், ராஜஸ்தானில் நடந்தாலும் பேசுவார். உங்கள் கூட்டத்தில் ஒரு காவல் துறை சகோதரிக்கு நடந்திருக்கிறது. இது குறித்து பேச வேண்டும். உங்கள் சகோதரர்தான் ஆட்சியில் இருக்கிறார். இதை கூட செய்யவில்லை என்றால், இந்த ஆட்சி எதற்காக இருக்கிறது என்பது எனது கேள்வி.

20 மாத திமுக ஆட்சி காலத்தில் கிடைத்திருப்பது ஒன்றே ஒன்றுதான். அது ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது. எந்த தைரியத்தில் நாற்பதும் நமதே என்று சொல்கிறீர்கள்? நாற்பதில் நான்கு எடுத்து விட்டால் பூஜ்ஜியம்தான் உங்கள் கைக்கு வரும். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும்.

முதலமைச்சராக இருப்பதற்கு மதிப்பெண் வழங்கினால், பூஜ்ஜியம் கூட மக்கள் போட மாட்டார்கள். நெகட்டிவ் மார்க்தான் போடுவார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அவர்கள் எங்கே செல்வார்கள்? தர்மபுரி மாவட்ட இளைஞர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததை பெருமையாக சொல்கிறேன் என்கிறார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.1,334 கோடி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் செலவு செய்தது ரூ.1,928 கோடி. 600 கோடி ரூபாய் திட்டமிட்ட தொகையிலிருந்து அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் சிஏஜி அறிக்கையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் தோல்வி அடைந்த திட்டம் என்றும், இத்திட்டம் தயாரித்தது தவறு என்றும் தெரிவித்துள்ளது. புளோரைடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.

இதனை நிறைவேற்றி இத்தனை ஆண்டு காலம் ஆகியும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் தண்ணீரை சோதனை செய்தால், ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி கிராம் கீழே புளோரைடு இருக்க வேண்டும். ஆனால் 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டபோது, 1. 5 மில்லி கிராம் அதிகமாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியதை விட அதிகமாக உள்ளது. ஐநா சபை குறிப்பிடுவதுபோல, ஒரு நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 30 லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இரண்டாம் கட்டத்திற்காக ரூ.4,500 கோடி திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே ஒருவர் அமைச்சர் கே.என்.நேரு. 4,500 கோடியில் 20 சதவீதம் வைத்தால் கூட 900 கோடி ரூபாய். கே.என்.நேரு காட்டில்தான் மழை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் முதல் அலகு, பட்டத்து இளவரசரின் படத்தைப்போல பிளாப் ஆகிவிட்டது.

தருமபுரி எம்பி ஒருவர் இருக்கிறார். அவரை பிடிக்க வேண்டும் என்றால் சூடத்தை ஏற்றி பூமி பூஜை செய்தால், அந்த இடத்திற்கு வருவார்.‌ இது திராவிடல் மாடல் ஆட்சி என்று வருவார். அதை தவிர டோட்டல் வேஸ்ட். நாடாளுமன்றத்தில் வம்பிலுத்து பல்பு வாங்குவார். தருமபுரி மக்களை இந்திய அளவில் அசிங்கப்படுத்தியதுதான் அவர் சாதனை” என்றார்.

இதையும் படிங்க: அரசியலில் இருந்து விலகலா..? பழனிவேல் தியாகராஜன் அளித்த புதுவிளக்கத்தின் பின்னணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.