ETV Bharat / state

கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம்; தமிழக எல்லையில் வலுக்கும் பரிசோதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:06 PM IST

கேரளாவிலிருந்து வருவோரை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர்
கேரளாவிலிருந்து வருவோரை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர்

Nipha Virus Checkup: கேரளாவில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில், சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

கேரளாவிலிருந்து வருவோரை பரிசோதனை செய்த சுகாதாரத்துறையினர்

கோயம்புத்தூர்: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் 30 ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிபா வைரஸ் தொற்று: இது தொடர்பாக மருத்துவமனை, சுகாதாரத் துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து நேற்று இறந்த இரண்டு நபர்களின் மருத்துவ பரிசோதனை வெளியானது, அதில் இருவருக்கும் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்தினரை தனி வார்ட்டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டது. தற்போது அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நிபா வைரஸ் பரவல் குறித்து கேரள மாநில அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக எல்லையில் பரிசோதனை: இதனிடையே கேரள மாநிலத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிபா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் ஏற்படாத வகையில் தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறையினர், தமிழக - கேரள எல்லைப் பகுதியில் பரிசோதனை செய்வதற்காக முகாமிட்டுள்ளனர்.

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கேரளா - தமிழ்நாடு எல்லை பகுதியான வாளையார் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, தமிழக சுகாதாரத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் உள்ளதா? இல்லையா என்றும் பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதே போல கேரள மாநில எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வேலந்தாவளம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே மாநில எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். மேலும் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களின் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை. நிபா வைரஸின் தாக்கம் இதுவரை இல்லை என்றாலும் தமிழக - கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. நிபா வைரஸ் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் பொதுமக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோவையை கூல் கோவையாக மாற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்.. "ஜிப் லைன்", "ஜிப் சைக்கிள்" ரைடு என குதூகலிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.