ETV Bharat / state

கோவையை கூல் கோவையாக மாற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள்.. "ஜிப் லைன்", "ஜிப் சைக்கிள்" ரைடு என குதூகலிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 12:18 PM IST

கோவையில்  “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு அறிமுகம்
கோவையில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு அறிமுகம்

Zipline and Zip Cycle ride in Coimbatore: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரிய குளத்தில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு விளையாட்டுக்கள் பணி விரைவில் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில்  “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு அறிமுகம்
கோவையில் “ஜிப் லைன்” மற்றும் “ஜிப் சைக்கிள்” ரைடு அறிமுகம்

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி (Smart City) திட்டத்தின் கீழ் சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 8 குளங்களை புனரமைத்து மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு ஏற்ற வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக குளக்கரைகளில் நடை பாதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பூங்கா, உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல மக்கள் அதிகம் கூடும் பந்தய சாலை, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாதிரி சாலைகளை அமைப்பதோடு, மக்களை கவரும் வகையில் பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், உக்கடம் குளக்கரையில் அமைக்கப்பட்ட ‘ஐ லவ் கோவை’ (I Love Kovai) செல்பி பாயிண்ட், பந்தய சாலை பகுதியில் உள்ள பிரம்மாண்ட மீடியா டவர் (Media Tower), குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டு வரும் தமிழ் எழுத்துக்களால் 20 அடி உயரத்தில் செய்யப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கிளாக் டவர் (Clock Tower), தேவதை செல்பி ஸ்பாட் உள்ளிட்டவை கோவையின் புதிய அடையாளங்களாக மாறி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குளத்தின் மேற்கு கரையில் a"ஜிப் லைன்" மற்றும் "ஜிப் சைக்கிள்" ரைடு சேவை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், இதன் சோதனை ஓட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடைபெற்றது.

ஒரே நேரத்தில் ஜிப் லைனில் மூன்று பேர் தொங்கி செல்லும் வகையிலும், ஜிப் சைக்கிளில் மூன்று பேர் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் முழுமையான பாதுகாப்பு அம்சத்துடன் முடிக்கப்பட்ட இந்த பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்

இதையடுத்து, இன்னும் 10 நாட்களில் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்கள் பயனபாட்டிற்கு வர உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் 200 மீட்டர் தொலைவு மற்றும் தண்ணீர் மேல் செல்லும் முதல் ஜிப் லைன், ஜிப் சைக்கிள் ரைடு கோவையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காணாமல் போன ஊராட்சி மன்ற தலைவர் மீட்பு! உறவினர் வீட்டில் தஞ்சமடைந்ததாக வாக்குமூலம்.. எதற்காக சென்றார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.