ETV Bharat / state

தெரு நாய்கள் பிரச்சனை..சட்டம் சொல்வது என்ன? மக்கள் மற்றும் என்ஜிஓக்கள் கேட்பது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 7:07 PM IST

Updated : Nov 25, 2023, 8:11 PM IST

ETV Bharat Tamil
ETV Bharat Tamil

தெரு நாய்கள் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சட்டம் சொல்வது என்ன? மக்கள் மற்றும் என்ஜிஓ-கள் கேட்பது என்ன? என்பதைப் பார்க்கலாம்.

சென்னை: சென்னையில் சமீபத்தில் வெறி பிடித்த தெரு நாய் கடித்து சுமார் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுத் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எங்குப் பார்த்தாலும் தெரு நாய்கள் அதிகரித்துக்காணப்படுவதாகவும், மக்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் அச்சம் இன்றி வெளியில் செல்ல முடியவில்லை என்ற சூழலும் உருவாகி உள்ளது. மேலும், நாய்கள் காரணமாக ஏராளமான சாலை விபத்துகள் நடைபெறும் நிலையில் பலர் உயிரிழக்கும் அபாயமும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சூழலில் தெரு நாய்களை என்ன செய்வது? அடித்துக் கொன்று விடலாமா? என்ற ஆத்திரமும் பொதுமக்களுக்கு வந்துள்ளது.

ஆனால் இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்றால்? மனிதர்கள் வாழ்வதுபோல நாய் உள்ளிட்ட விலங்குகளும் ஊருக்குள் வாழ முழு அனுமதியும் சுதந்திரமும் உண்டு. நாய்களை அடிக்கவோ, விஷம் வைத்தோ அல்லது வேறு வழிகளிலோ கொலை செய்யவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. மீறிச் செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கச் சட்ட ரீதியாக அனைத்து வழிகளும் உள்ளன.

அரசு சார் அதிகாரிகள் கூட நாய்களை கருத்தடை செய்வதற்காகப் பிடித்துச் சென்றால் எங்கு இருந்து அந்த நாய்களைப் பிடிக்கிறார்களோ அதே இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும். வேறு இடத்தில் மாற்றிக் கொண்டு விட்டால் அதுவும் சட்டப்படி குற்றம் என்றே கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி பாலூட்டும் பெண் நாய் மற்றும் கர்ப்பிணி நாய்களைப் பிடிக்கவும் சட்டத்தில் இடமில்லை. அது மட்டும் இன்றி தெரு நாய்களுக்கு ஒரு நபர் தனிப்பட்ட முறையில் உணவு வழங்குகிறார் என்றால் அதற்குச் சட்டத்தில் முழு அனுமதியும் உண்டு.

அரசிடம் என்ஜிஒ-கள் வைக்கும் கோரிக்கை: தெரு நாய்களைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் கருணையின் அடைப்படையில் அதிகம் சவால்களைச் சந்திக்க வேண்டி உள்ளதாக, மதுரை ஊர்வன அமைப்புத் தலைவர் விஸ்வநாத் கூறியுள்ளார். தெரு நாய்கள் மனித சமுதாயம் போலவே கூட்டமாகவும், தனியாகவும் வாழச் சுதந்திரம் பெற்றவை என்ற நிலையில், தொல்லை எனக் கருதி நாய்களைப் பொதுமக்கள் அல்ல அரசு அதிகாரிகள் கூட கொலை செய்ய அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.

விஸ்வநாத்,  ஊர்வன அமைப்புத் தலைவர், மதுரை
விஸ்வநாத், ஊர்வன அமைப்புத் தலைவர், மதுரை

அப்படிச் செய்ய வேண்டும் என்றால் முறையான, ஆதாரத்துடனான தகவல்களை வழங்கி அனுமதி பெற்று பிறகே அரசு அதிகாரிகளால் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தைப் பொருத்த வரை நாளுக்கு நாள் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் நிலையில் இது பொதுமக்களுக்கு ஆபத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளதாக விஸ்வநாத் கூறியுள்ளார்.

அரசின் சீரிய தலையீடு தேவை: இந்நிலையில், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தமிழகம் முழுவதும் நாய்களுக்கு கருதடை செய்யும் முகாம்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனவும், கருத்தடை பணி என்பது முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு நீண்ட ஆண்டுகள் வரை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். அது மட்டும் இன்றி, இதற்காக அரசு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

  • ஆண் நாய்களை விட, பெண் நாய்களுக்கு கருத்தடை செய்ய போதுமான வசதி இல்லை
  • தமிழகம் முழுவதும் கருத்தடை முகாம்களை அதிகரிக்க வேண்டும்
  • நாய் பிடிப்போருக்குப் பயிற்சி வழங்க வேண்டும், போதுமான சேவைகள் கிடைக்க வேண்டும்
  • தெரு நாய்களுக்கு உணவு வழங்குபவர்களைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற வேண்டும்
  • வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி மற்றும் கருத்தடை சரியாக மேற்கொள்ள வேண்டும்

இந்த விவகாரத்தில் கழிவு மேலாண்மையின் பங்கீடு மிக முக்கியமானது: கழிவு மேலாண்மை வாரியம் குப்பைத் தொட்டிகளில் இருந்து முறையாகக் குப்பைகளை நீக்குதல். மக்களுக்குத் தேவைப்படும் இடங்களில் கூடுதலாகக் குப்பைத் தொட்டிகளை வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

குப்பைகள் தேங்கிக் கிடக்கும் இடத்தில் உணவு தேடி அலையும் தெரு நாய்கள் கூட்டம், சில நேரங்களில் அந்த வழியாகச் செல்லும் மக்களைக் கடிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். சாலைகளில் குப்பைகளை வீசி எரியும் சுற்றுச் சூழல் துஷ்பிரையோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரேபிஸ் தடுப்பூசி எந்த அளவுக்கு நம்பகத் தன்மை உடையது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

Last Updated :Nov 25, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.