ETV Bharat / state

12 மணி நேர வேலை சட்டமசோதாவுக்கு எதிர்ப்பு - மே 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!

author img

By

Published : Apr 23, 2023, 6:40 PM IST

Trade
வேலை

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகுக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து, மே 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதா, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ள இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக இன்று(ஏப்.23), சோசலிச தொழிலாளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காவடி தூக்கும் 12 மணி நேர வேலை சட்டம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் கொடூர சட்டம். 12 மணி நேரம் வேலை வாங்கலாம் என சட்டப்பூர்வமாக முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்குவது, தொழிலாளர்களைக் கொத்தடிமையாக முதலாளிகளுக்கு விற்பதற்குச் சமமாகும். இந்த கொடூர சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மே 12ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: 12 மணி நேர வேலை மசோதா - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.