ETV Bharat / state

12 மணி நேர வேலை மசோதா - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம்!

author img

By

Published : Apr 23, 2023, 3:20 PM IST

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு எதிர்ப்புகளை மீறி இச்சட்டத்தை பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

emp
வேலை

சென்னை: தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்த மசோதா கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, பாமக, மதிமுக உள்ளிட்டப் பல்வேறு அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

இந்த சட்ட மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவானது என அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரசு ஊழியர்களும் இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசு இன்று(ஏப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூறாண்டாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளான 8 மணி நேர வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம், சமூகப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்றவற்றை ஒழித்து 12 மணி நேர வேலை, ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயித்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது, ஒப்பந்த வேலை முறை போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்திருத்தங்களை கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 40 நொடிகளில் நிறைவேற்றி இருக்கிறது திமுக அரசு.

இதன் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து மே தின பரிசு கொடுத்திருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் பாஜக அல்லாத வேறு எந்த மாநிலங்களிலும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் தொழிலாளர் விரோதச் சட்ட திருத்தம் 65ஏ-வை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதன் மூலம் மோடியின் வழியில் அவரையும் முந்தி நடை போட ஆரம்பித்திருக்கிறார், தமிழ்நாடு முதலமைச்சர்.

இந்த ஆட்சியை திராவிட மாயை ஆட்சி என்று சொல்வதைத் தவிர, வேறென்ன செய்வது. இந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. நீங்கள் கொண்டு வந்துள்ள கருப்பு சட்டங்களையும், திட்டங்களையும் நீங்களே விலக்கிக்கொள்ள வேண்டும். கார்ப்பரேட்களின் சேவகனாக இருப்பதை விட அரசு ஊழியர் தொழிலாளர்களின் நாயகனாக இருக்கப் பாருங்கள். நீங்கள் மாறாவிட்டால் உங்களை மாற்றம் செய்யும் வேலைகளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், தொழிலாளர்களும் மேற்கொள்ள வேண்டி வரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை
ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை

தேசிய ஆசிரியர் கூட்டமைப்பான ஐபெட்டோவின் அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே 1 தொழிலாளர் தினம். உலகம் முழுவதிலும் கொண்டாடுகின்ற நாளில் தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக ஆபத்தான தொழிலாளர் விரோதச் சட்டத் திருத்தங்களை தமிழக சட்டசபையில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த 65ஏ சட்டத் திருத்தத்தில், வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிப்பது, வாழ முடியாத அளவுக்கு ஊதியங்களை குறைந்தபட்சமாக நிர்ணயிப்பது, தொழிலாளர்களுக்காக இருக்கும் சமூகப் பாதுகாப்பு நலன்களைக் குறைப்பது, நிரந்தர வேலை வாய்ப்பை ஒழித்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்த அனுமதிப்பது உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

திராவிட மாடல் அரசின் சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு என்று அழைத்தீர்களே, மத்திய அரசு கொள்கையில் இப்படி ஒன்றிப்போவதற்குதான் திட்டமிட்டு அந்த பெயரை வைத்து அழைத்தீர்களா?. மத்திய அரசு தொழிலாளர் விரோத அரசு. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் நல விரோத அரசு. ஏன் தமிழக அரசையும் இப்படித்தான் அழைக்கப்போகிறோம்.

ஜாக்டோ ஜியோ மட்டுமல்ல, தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து தொழிலாளர் விரோத கொள்கைக்கு அழுத்தமான கண்டனத்தை தெரிவிப்போம். ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் ஏற்கனவே வேலை நேரத்தை அதிகரிக்கவில்லையே தவிர, அன்றாட பணிச்சுமையின் மூலம் சித்ரவதை செய்து வருகின்றனர். பொறுத்தது போதும் கரம் கோர்த்து அனைவரும் பொங்கி எழுவோம். இந்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ள அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவேற்று, பாராட்டுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் கூறும்போது, "நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளன்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கொண்டு வந்த தொழிலாளர் நலச் சீர்திருத்த மசோதா தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, ஒன்றிய அரசைப் பின்பற்றி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை மீதி, மூன்று நாட்கள் விடுமுறை என்று அறிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது இனி வரும் காலங்களில், ஒப்பந்த அடிப்படையிலேயே ஊழியர்களை நியமனம் செய்வதற்கான ஒரு முன்னேற்பாடாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 மணி நேரம் வேலை செய்து விட்டு அடுத்த நாள் விடுமுறை இல்லாமல் தொடர்ச்சியான வேலையாக எப்படி ஏற்கும் அரசு? எப்படி நிரந்தர ஊழியராக கருத முடியும்? என பல கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள் பல மணி நேரம் அடிமைப்பட்டு மணிக்கணக்கில் நாள் கணக்கில் வேலை செய்தார்கள்.

இந்த கொடுமையை போக்க அம்பேத்கர், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து சட்டமாக்கி ஊழியர்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுத்தார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை, அம்பேக்தர் இயற்றிய சட்டத்தையும், தொழிலாளர்களின் தியாகத்தையும் குழி தோண்டி புதைப்பதற்குச் சமமானது. இது மத்திய அரசின் தொழிலாளர் விரோதச் சட்டத்திற்கு துணை போவதாகவே அமைந்து விடும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்; ஆளுநரை சந்திக்க பாஜக திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.