ETV Bharat / state

என்எல்சியால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பை ஆய்வு செய்ய குழு - நீதியை எதிர்பார்க்கும் பூவுலகின் நண்பர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 5:34 PM IST

என்.எல்.சி, அனல்மின் நிலையங்களை சுற்றி சுற்றுசூழல் மாசு அதிகரிப்பா? ஆய்வு செய்ய குழு அமைத்த தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம்
tamilnadu-pollution-control-board-committee-research-nlc-and-thermal-power-station-near-villages

Tamil Nadu Pollution Control board Committee: நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது.

சென்னை: நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்எல்சி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்களும், ரசாயனங்களும் நீரிலும், நிலத்திலும் கலந்திருப்பதாகவும், என்எல்சியின் ஒன்றாவது சுரங்கத்திற்கு அருகில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் மட்டும் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பதாகவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி மற்றும் ஐடிபிசிஎல் அனல்மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மண் மற்றும் குடிநீர் ஆகியவை இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் குடிநீருக்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய வரம்புகள் மற்றும் பிற தொடர்புடைய தரங்களை பூர்த்தி செய்யத் தவறியுள்ளது. மிகவும் ஆபத்தான இந்த வகையான மாசுபாட்டை உடனடியாக நிறுத்த இந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

ஆங்கிலத்தில் "Powering Pollution" என்றும், தமிழில் "மின்சாரத்தின் இருண்ட முகம்" எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கைக்கான கள ஆய்வுகள் 2022ஆம் ஆண்டு தொடங்கி 2023 ஏப்ரல் வரை நடைபெற்றது. ஆதண்டார்கொல்லை, அகிலாண்டகங்காபுரம், கல்லுக்குழி, தென்குத்து, வானதிராயபுரம், வடக்கு வெள்ளூர், தொப்பலி குப்பம், கரிக்குப்பம், புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் 121 வீடுகளில் நேரடியாகச் சென்று நேர்காணல் அடிப்படையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த கேள்விகள் எழுப்பி, அதற்கான பதில்கள் பெற்று, விவசாய அமைப்புகள், குழுக்களிடம் விவாதங்கள் நடத்தியும் தகவல்கள் பெறப்பட்டன.

நீர், மண் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளைப் பொறுத்தவரையில், என்எல்சியைச் சுற்றி ஆய்வு செய்யப்பட்ட 31 இடங்களில், 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருந்தது. 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தது. குறிப்பாக, என்எல்சியின் ஒன்றாவது சுரங்கத்திற்கு அருகிலுள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தின் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகம் பாதரசம் கலந்திருந்தது.

மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுப்படி "பாதரசம் மனித குலத்திற்குத் தெரிந்த மிகவும் நச்சான பொருள் மற்றும் அதை உட்கொள்வது ஆபத்தானது மற்றும் தோல் வழியாக உறிஞ்சப்பட்டால் தீங்கு விளைவிக்கக் கூடியது. இது நரம்பு மண்டலம், செரிமான மற்றும் சுவாச அமைப்புகள் மற்றும் சிறுநீரகங்களில் தீங்கு உண்டாக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

என்எல்சியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களுக்கு அருகிலிருக்கும் கிராமங்களில் வசிக்கும் ஒருவருக்காவது சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத்திணறல் சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டன. வேளாண் பாசனத்திற்கு வரும் தண்ணீரின் தரம் மாசடைந்திருப்பதும் கண்டறியப்பட்டன.

என்எல்சியின் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையத்திலிருந்து நேரடியாக கழிவுகள் வெளியிடப்படும் 5 இடங்களில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகள் கடுமையாக மாசடைந்திருந்தன. இந்த மாசுவின் அளவானது சுற்றுசூழல் பாதுகாப்புச் சட்ட வரம்புகளை மீறுவதாக உள்ளது. இதில் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பாதரசம், செலினியம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது.

இந்த ரசாயனங்களும், கன உலோகங்களும் தொடர்ச்சியாக மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளில் கலப்பதாலும், காற்றில் கலப்பதாலும் மக்களின் ஆரோக்கியமும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதை ஆய்வுக் குழுவினர் நேரடியாகவும், மாதிரிகள் சோதனையிட்டதன் மூலமும் கண்டறியப்பட்டுள்ளன.

என்எல்சியின் கழிவுகள் வெளியேற்றத்தால் பாதிப்படைந்த விளைநிலங்களின் மண் மாதிரிகளை ஆய்வு செய்ததில், அதில் நிக்கல், ஜிங்க், காப்பர் உள்ளிட்ட கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளன. பரங்கிப்பேட்டையில் ஐடிபிசிஎல் நடத்தி வரும் அனல்மின் நிலையத்திற்கு அருகில் இரண்டு கிராமங்களில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நீர், மண் மாதிரிகளில் 3 இடங்கள் தீவிரமான மாசடைந்திருந்தன.

ஒரு இடம் குறிப்பிடத் தகுந்த அளவில் மாசடைந்திருந்தது. 2 இடங்கள் ஓரளவு மாசடைந்திருந்தன. மண் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட, 30 மடங்கு அதிகமாக போரான் இருந்தது. இந்த போரான் அருகிலுள்ள அனல்மின் நிலையத்திலிருந்து வந்திருக்கவே வாய்ப்புகள் அதிகமுள்ளன. இது அம்மண்ணை விவசாயத்திற்குப் பயன்படாததாக மாற்றியுள்ளன.

நெய்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விரிவான சுகாதார ஆய்வுகளை அரசு நடத்த வேண்டும். உடனடியாக கடுமையாக பாதிப்படைந்த பகுதிகளில் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அனல்மின் நிலையங்கள், சுரங்கங்கள், விரிவாக்கங்கள் மற்றும் நிலம் கையகப்படுத்துதலை நிறுத்த வேண்டும். ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை படிப்படியாக நிறுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு என்எல்சி நிறுவனத்தின் சுற்றுச்சூழலை ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளது குறித்து பூவுலகின் நண்பர்கள் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நெய்வேலி மற்றும் பரங்கிப்பேட்டையில் செயல்படும் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பூலகின் நண்பர்கள் அமைப்பு, மந்தன் அத்யாயன் எனும் அமைப்புடன் இணைந்து விரிவான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரித்து ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் வெளியிட்டது.

”மின்சாரத்தின் இருண்ட முகம்” எனும் அந்த ஆய்வறிக்கையானது, நெய்வேலி, பரங்கிப்பேட்டை இடங்களில் நீர்நிலைகளும், நிலத்தடி நீரும், வேளாண் நிலமும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான அளவில் ரசாயனங்கள், கன உலோகங்களால் பாதிப்படைந்திருந்ததை வெளிக் கொணர்ந்துள்ளன.

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் கொண்ட அமர்வு தாமாக முன்வந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று இந்த வழக்குகளை விசாரித்தது. இந்விசாரணையில், இம்மாசுபாடு தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம், மத்திய, மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள், மத்திய மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

அந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 28) விசாரனைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்குட்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும், இக்குழு ஏற்கெனவே சில இடங்களில் நீர் மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தது. ஆய்வின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் முடிவுகள் கிடைத்தவுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த வழக்கின் பிற மனுதாரர்களான என்.எல்.சி., மத்திய மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால், இவ்வழக்கின் மீதான விசாரணை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்னெடுத்துள்ள இவ்விசாரணை, என்எல்சி செயல்பாடுகளால் விளையும் மாசுபாட்டைக் குறைக்கும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட நீதியை வழங்கும் எனவும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விவசாயி தோட்டத்தில் பால் நிறத்தில் வரும் தண்ணீர்: பஞ்சத்திற்கான அறிகுறியா? விவசாயி அச்சம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.