ETV Bharat / state

மாதிரி பள்ளிகளில் திறன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By

Published : Mar 9, 2023, 7:50 AM IST

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்கள் உட்பட பல அளவீடுகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்காக நுழைவு தேர்வு நடத்தப்படாது என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை: அரசுப் பள்ளிகளில் திரையிடப்பட்ட நிகழ்வுகளின் ஒரு பகுதியாகச் சிறார் திரைப்படங்கள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இறுதிக் கட்ட பயிற்சி சென்னையில் நடத்தப்படுகின்றது. இதில் 150 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். அதன் துவக்க விழா சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, கல்வியாளர்கள், திரைத்துறையைச் சார்ந்தோர் கலந்துகொண்டு இத்திட்டத்தைப் பெரிதும் வரவேற்றுப் பாராட்டியுள்ளனர்.

விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "குறும்படத்துக்கான முழு திறனை மாணவர்கள் காட்ட வேண்டும். குறும்பட போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட்க்கு அழைத்துச் செல்லவுள்ளோம். சுற்றுலா என்றால் யாரோ ஒருவரை வைத்து அழைத்துக் கொண்டு போங்கள் என்று கூற மாட்டோம். நானே உடன் அழைத்துச் செல்வேன். கல்வி ஒன்று மட்டுமே நம் வாழ்க்கைக்கான தேவையல்ல. நமக்கான தனித்திறமையும் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றுத் தரும் என்பதை இத்திட்டம் வெளிப்படுத்தியுள்ளது” எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "மாதிரிப் பள்ளிகளில் மாணவர்கள் மதிப்பெண்கள் உட்பட பல அளவீடுகளின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அதற்காக நுழைவுத் தேர்வு நடத்தப்படாது. ஏற்கனவே வெளியான சுற்றறிக்கையில் அட்மிஷன் என்ற வார்த்தை தவறாக இடம் பெற்று விட்டது. மாதிரி பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேநேரத்தில் பிற மாணவர்களையும் தொடர்ந்து படிக்க வைப்பதற்கு நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும். மாதிரி பள்ளிகளுக்குக் குறித்து சட்டப்பேரவையில் அறிவித்த போது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பினார். அப்பொழுது கூறியது போல் அனைத்து மாணவர்களையும் உயர் கல்வி படிக்க வைப்பது எங்களின் நோக்கமாகும்" என்றார்.

பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை

தொடர்ந்து பேசிய அவர், "கோடைக் காலத்தில் வெயில் காலம் அதிகமாக இருந்தாலும் அதற்காகப் பொதுத்தேர்வுகளில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு ஆறு வயதிற்கு மேல் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் ஜூன் மாதத்திற்கும் முடிக்கப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான வயது குறித்து அறிவிக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையைச் சேதம் செய்தது தொடர்பாகப் பெற்றோரை அழைத்து கடிதம் வாங்கி அறிவுரை வழங்க இருக்கிறோம். மேலும் மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். மற்ற மாணவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கிறோம்" என்றார்.

மாதிரி பள்ளிகள் சமச்சீர் கொள்கைக்கு முரணானதா?

மேலும், "ஏற்கனவே பின்தங்கிய கல்வி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள மாதிரி பள்ளிகள் ஒன்றிய அரசினால் துவக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரி பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டி உள்ளது. மாதிரி பள்ளிகள் திட்டம் சமச்சீர் கொள்கை முரணானது அல்ல. திறமை வாய்ந்த மாணவர்கள் தொடர்ந்து நல்ல உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்பதற்காகவே மாதிரி பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.நீட் தேர்வுக்குரிய பயிற்சி பள்ளி வகுப்புகளில் அதி நவீன ஆய்வகம் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நிதி சார்பற்ற கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றுவது குறித்து தொடரில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கப்பள்ளி இயக்குநர் அறிவொளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மத்திய அரசுப் பணிகள் மீது தமிழக இளைஞர்களுக்கு மோகம் குறைவு? - TNSDC புதிய திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.