ETV Bharat / state

லியோ வெற்றி விழா மேடையில் நடிகர் விஜய் பேசிய '2026' - அண்ணாமலை ரியாக்‌ஷன் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 4:45 PM IST

Tamil Nadu BJP president Annamalai
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் தான் இறுதியாகத் தேர்ந்து எடுப்பார்கள் - அண்ணாமலை

Tamil Nadu BJP president Annamalai: நடிகர் விஜய் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் தான் இறுதியாகத் தேர்ந்து எடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "டெல்லி மதுபான ஊழலில் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தவறு இருப்பதாகத் தெரிய வருகிறது. வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதில் ஆதாரம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவருகிறது. இதை உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்து உள்ளது.

மேலும் கெஜ்ரிவாலுக்குச் சம்மன் தரப்பட்டு உள்ளது. அவர் அதற்குப் பதில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அமலாக்கத் துறை என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். தவறு செய்யாத முதலமைச்சர் ஏன் பயந்து பேச வேண்டும்.

இந்தியா கூட்டணியில் இல்லாத சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்து உள்ளது. அதற்கும் பாஜக-விற்கும் சம்பந்தம் இருக்கிறதா. சமீபத்தில் அமித்ஷாவை அவரது மகன் சந்தித்தார். தவறு செய்பவர்களை அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுக்கிறது. பாஜக அரசு தான் அமலாக்கத்துறையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதாக எதிர்க்கட்சிகள் சொல்வது பொய். மடியில் கனம் இல்லை என்றால் வழியில் என்ன பயம் இருக்க வேண்டும்.

5 மாநில தேர்தலில் இந்தியா கூட்டணியில் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பது உண்மை. தேர்தலில் சீட்டு கிடைக்காததால் அகிலேஷ் யாதவ் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தி உள்ளார். இந்தியா கூட்டணி 5 மாநில தேர்தலுக்கு முன்பா நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சிதைந்து விடும்" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து 2026ல் கப்பு முக்கியம் என நடிகர் விஜய் பேச்சு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது குறித்து கருத்துச் சொல்ல விரும்பவில்லை. யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன். மக்களுக்கு என்ன செய்யப் போவதாக உள்ளீர்கள் என்ற ஐடியாலஜி தாருங்கள். யாரும் அரசியலுக்கு வருவதற்குத் தடையாக இருக்கக் கூடாது. மக்களுக்கு சாய்ஸ் இருக்க வேண்டும்.

3 கட்சிகள் இருக்கும் இடத்தில் 6 கட்சிகள் இருந்தால் நல்லது தானே. புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது தான் சிஸ்டம் ஷேக் ஆகும். பழையவர்களே 30 வருடம் 40 வருடம் இருந்தால் சேல் ஆகிவிடும். நீரோடை போல் ஒடி கொண்டு இருக்க வேண்டும். நடிகர் விஜய் உள்பட யார் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் தான் இறுதியாகத் தேர்ந்து எடுப்பார்கள்" என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" - நடிகர் விஜய்! சட்டமன்ற தேர்தலா? உலக கோப்பை கால்பந்தா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.