ETV Bharat / state

"2026ல் கப்பு முக்கியம் பிகிலு" - நடிகர் விஜய்! சட்டமன்ற தேர்தலா? உலக கோப்பை கால்பந்தா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 11:47 AM IST

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

”கப்பு முக்கியம் பிகிலு” - லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேச்சு
நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற லியோ படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான திரைப்படம் லியோ. இப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.540 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால், இதன் வெற்றி விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக படக் குழு கொண்டாடியது. நடிகர் விஜயின் குட்டி கதைக்காக காத்திருந்த அவரது ரசிகர்கள், வெற்றி விழாவினால் மிகவும் உற்சாகமடைந்தனர்.

நடிகர் விஜய் குட்டிக் கதை சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விழா மேடையில் நடிகர் விஜய் பேசியதாவது, "மாநகரம் படத்தை திரும்பி பார்க்க வைத்தார். கைதியை திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். விக்ரம் படத்தை இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், லியோ படத்தை உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். பார்த்து விட்டதா லோகேஷ்..

தயாரிப்பாளர் லலித் சினிமாவை எவ்வளவு நேசிக்கிறார் என்பது, மாஸ்டர் ரிலீஸ் போது, அவரிடம் நான் கேட்ட ஒரே வார்த்தைக்காக ஒரு வருடம் கழித்து தியேட்டரில் ரிலீஸ் செய்தார்கள். அனிருத் நாளுக்கு நாள் அவரது வெயிட் ஏறிக்கிட்டே செல்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

புரட்சித் தலைவர் என்றால் ஒருத்தர் தான், நடிகர் திலகம் என்றால் ஒருத்தர் தான். கேப்டன் என்றால் ஒருத்தர் தான், உலக நாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான், தல என்றால் ஒருத்தர் தான், தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதை செய்வார்கள். அரசருக்கு கீழ் இருப்பவர்.

எனக்கு மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்து விட்டு போகிறேன். கற்பனையாக ஒரு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என்றால், போதைப்பொருள் தடுப்பு பிரிவில் மந்திரி பதவி லோகேஷுக்கு கொடுக்கலாம்.

வெற்றி, தோல்வி இருந்தாலும் தோல்வியை பற்றி தான் யோசிப்பேன். கல்வி என்பது ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவருக்கும் சரிசமமாக கிடைக்க வேண்டிய ஒன்று. மக்கள் பிடித்திருந்தால் தட்டி குடுப்பாங்க, இல்லையென்றால் தட்டி விட்டு விடுவார்கள்" என்று கூறினார்.

2026 சட்டசபை தேர்தல் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய், அந்த வருடம் கால்பந்து போட்டி நடக்கவிருக்கிறது, கப்பு முக்கியம் பிகிலு.. அதனை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: "விஜய் விஜயாகவே இருப்பதற்கு யார் காரணம்?" - லியோ வெற்றி விழாவில் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.