ETV Bharat / state

ஃபகத் ஃபாசில் வீடியோவை ஷேர் செய்தால் நடவடிக்கை? - ஃபகத்திற்கு கோரிக்கை வைத்த கிருஷ்ணசாமி!

author img

By

Published : Aug 6, 2023, 6:39 AM IST

Etv Bharat
Etv Bharat

மாமன்னன் திரைப்படத்தில் வரும் ரத்னவேல் கதாபாத்திரத்தை வைத்து சாதிய தூண்டுதலுக்கு உள்ளாகும் வகையில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது நடிகர் ஃபகத் ஃபாசில் புகார் அளிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் க. கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் க. கிருஷ்ணசாமி ஃபகத் ஃபாசிலுக்கு வேண்டுகோள்

சென்னை: நடிகர் ஃபகத் ஃபாசிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தை வைத்து பல்வேறு சமூகத்தினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். சாதிய மோதலை உண்டாக்கும் வகையில் வீடியோ வெளியிடுவோர் மீது நடிகர் ஃபகத் ஃபாசில் புகார் அளிக்க வேண்டும் என க. கிருஷ்ணசாமி வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ''பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேல், ஃபகத் ஃபாசில் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘மாமன்னன்’. இந்தப் படத்தில் நடித்த வில்லன் 'ரத்னவேல்’ கதாபாத்திரத்தை திரித்து பல்வேறு சமூகங்களுக்கு இடையே சாதிய பிணக்குகளையும், தீண்டாமை உணர்வுகளையும், வன்முறைகளையும், தூண்டக்கூடிய வகையிலும்; மனித உரிமைகளை பறிக்கக் கூடிய வகையிலும் வீடியோ, மீம்ஸ் தயாரித்து சமூக வலைதளங்களில் கடந்த நான்கு நாட்களாக பரப்பி வருகின்றனர்.

பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகன் என்றால் நல்லவர்களாகவும், வில்லன்கள் என்றால் கொடூரமானவராக, மோசமானவராக காட்டுவதும் திரைப்படங்களில் வழக்கம். மாமன்னன் படத்தில் 'ரத்தினவேல்’ என்ற வில்லன் பாத்திரம் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. ஆனால், இந்திய சமுதாயத்தில் பன்னெடுங்காலமாக புரையோடிப் போய் இருக்கக்கூடிய சாதிய மோதல்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட சில சமூகங்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் பல்வேறு தளங்களில் நவீனப்படுத்தப்படுத்தப்பட்ட தீண்டாமை, வன்கொடுமைகள், மனித உரிமைகளை பிரதிபலிக்கக் கூடிய பாத்திரமாக அது சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காட்சிப்படுத்தப்படும்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, தனிநபரையோ பாதிக்கக் கூடியதாக இருந்திருந்தால் அவர்கள் சட்டரீதியாக நிவாரணம் தேட வழி உண்டு. ஆனால், அதை விடுத்து அந்த வில்லன் கதாபாத்திரத்தை ‘கவுண்டர், முதலியார், பிள்ளைமார், தேவர்’ போன்ற சமூகங்களிடையே வலிந்து திணித்து இப்படித்தான் இருப்போம் என்பதைப் போன்று தமிழ்நாடு மக்கள், இளைஞர்கள் மத்தியில் சாதியக் காழ்ப்புணர்வுகளை விதைக்க வேண்டும்; அதன் மூலம் ஒரு சாதிய மோதலை தமிழ் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் சிலர் மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இச்சம்பவம் தமிழ் மீடியாக்களிலும், சமூக வலை தளங்களிலும், உலகப் பிரசித்திபெற்ற பிபிசி ஊடகம் வரையிலும் விவாதப் பொருளாகவும், கருத்து மோதல்களாகவும் உருவெடுத்துள்ளது. தமிழ்ச் சமூகங்களுக்கு இடையே சாதி, மத, இன மோதல்களை தூண்டும் வகையில் மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் தயாரித்து பொதுவெளியில் இளைஞர்கள் பரப்பி வருகின்றனர். யாருடைய தூண்டுதலின் பேரிலோ தான் இந்த வகையிலான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இத்தகைய வீடியோக்களை வெளியிடுபவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் ஃபகத் ஃபாசில், தன்னுடைய வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி சாதியத் தூண்டுதலை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோர் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய வீடியோக்கள் தமிழ் சமுதாயத்திற்குள் பிளவுகளை உண்டுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவோர் மீது காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ‘தமிழக அரசு வார்த்தை ஜாலங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ - விஜயபாஸ்கர் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.