ETV Bharat / state

இரவு நேரத்தில் விசாரணை கைதிகளை விசாரிக்கக் கூடாது: டிஜிபி சுற்றறிக்கை

author img

By

Published : May 3, 2022, 1:19 PM IST

Updated : May 3, 2022, 4:28 PM IST

டிஜிபி சுற்றறிக்கை
டிஜிபி சுற்றறிக்கை

தமிழ்நாடு முழுவதும் விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது எனவும், மாலைக்குள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டுமெனவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக கடந்த மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-ஐ தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் 19ஆம் தேதி உயிரிழந்தார்.

வலிப்பு வந்து விக்னேஷ் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், விக்னேஷை காவல்துறையினர் துரத்திச் சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சமூக வலைதளங்களில் கண்டனம்: அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவர் சாராய விற்பனை வழக்கில் கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தங்கமணி 27ஆம் தேதி வலிப்பு வந்ததால் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் கொடூர தாக்குதலே தங்கமணியின் உயிரிழப்புக்கு காரணம் எனக் குடும்பத்தார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்விரு வழக்குகள் தொடர்பான விசாரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பிலும் லாக்-அப் மரணங்களுக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பி வருகிறது.

டிஜிபி சுற்றறிக்கை: இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக இன்று (மே 3) உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அந்த சுற்றறிக்கையில், "காவல்துறையினர் எக்காரணத்தைக் கொண்டும் விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க கூடாது. கைது செய்யப்படும் விசாரணை கைதிகளிடம் காவல்துறையினர் மாலை நேரத்திற்குள் விசாரணையை முடித்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

இரு விசாரணை கைதிகளின் அடுத்தடுத்த மரணத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கு.. வெளியான புதிய ஆதாரம்!

Last Updated :May 3, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.