ETV Bharat / state

பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்!

author img

By

Published : Apr 12, 2023, 12:24 PM IST

New
கல்லூரி

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில், வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு வேலைக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சில நேரங்களில் வேலை கிடைத்தாலும் மிகவும் குறைவான ஊதியமே கிடைக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாணவர்களுக்கு தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன்களை அளிக்கும் வகையில் பாடத்திட்டம் இல்லை என்பதும் முக்கிய காரணம். இந்த சிக்கலைப் போக்குவதற்காக, மாணவர்களை தொழில் திறனுடன் உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவிப்பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள், 406 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் என 496 பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் வரும் கல்வியாண்டில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளுடன் இணைந்து, தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பட்டயப் படிப்பும், கரூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நெசவு தொழில்நுட்பம் எனும் புதிய பட்டயப்படிப்பும், கோயம்புத்தூரில் உள்ள அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி பொறியியல் பட்டயப் படிப்பும், விழுப்புரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் பட்டயப் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பட்டய படிப்புகள் அந்தந்த பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான திறன்களை வளர்க்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயிற்சி வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு படிக்கும் போதே நேரடியாக தொழிற்சாலைகளில் சென்றும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.