ETV Bharat / state

"பிராயசித்தம் தேடுவதற்கே அண்ணாமலை நடைபயணம்" - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!

author img

By

Published : Aug 2, 2023, 7:16 AM IST

Minister Sekar Babu
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

கடந்த 9 ஆண்டுகளாக பாஜக தமிழ்நாடு மக்களை வஞ்சித்ததற்கு பிராயசித்தம் தேடுவதற்கான நடைபயணமாக அண்ணாமலையின் நடைபயணம் அமைந்துள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அத்துறையின் அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மாதாந்திர சீராய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "ஆஹம விதிப்படி அர்ச்சகர் நியமனம் நடைபெறுவது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்ட வரும் நிலையில், மேலும் 2 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் துவங்கப்பட உள்ளது.

மேலும், இதேபோல் 15 கோயில்களில் மருத்துவமனை உள்ளது. இம்மாதம் செப்டம்பரில் கூடுதலாக 2 மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையான திருக்கோயிலில் திருப்பணிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, பெரிய பாளையம், நங்கநல்லூர் ஆகிய கோயில்களில் தங்கத்தேர் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்து அறநிலையத்துறை சார்பில் சுமார் 4 ஆயிரத்து 995 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஆயிரத்து 433 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் மதிப்பு 5 ஆயிரம் கோடியாக நெருங்க உள்ளது.

இதனுடன் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 1 லட்சத்து 34 ஆயிரத்து 547 ஏக்கர் நிலங்களுக்கு நில அளவையும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 866 கோயில்களுக்குக் குட முழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 7 ஆயிரத்து 500 திருக்கோயில்களுக்குத் திருப்பணிக்காக சுமார் 150 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அன்னைத்தமிழ் வழிபாடு திட்டம் 48 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கி 150 உதவு அர்ச்சகர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் எழுத்துக்களை நிலைநாட்டுவதுதான் அரசின் கொள்கை.

பாஜக அண்ணாமலை நடைப்பயணத்தால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. இது திராவிட மண், திராவிட மாடல் ஆட்சிக்குத்தான் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். கடந்த 9 ஆண்டுகளாக பாஜக தமிழ்நாடு மக்களை வஞ்சித்ததற்கு பிராயசித்தம் தேடுவதற்கான நடைப்பயணமாக தற்போது அண்ணாமலையின் நடைபயணம் அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் திமுகவின் செல்லப்பிள்ளைகள்' - ஜெயக்குமார் விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.