ETV Bharat / state

mekedatu dam issue: மேகதாது அணைக்கு ரூ.1000 கோடி கர்நாடக அமைச்சர் டிகே.சிவக்குமார்.. ஆட்சிக்கு வந்தவுடன் வேலையை காட்டுவதா? என துரைமுருகன் கண்டனம்

author img

By

Published : May 31, 2023, 5:04 PM IST

durai murugan
கர்நாடக அரசு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுக்கும், கர்நாடகாவில் ஆளும் காங்கிரசுக்கும் இணக்கமான உறவு இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களின் நிலைப்பாடும் வெவ்வேறாகவே உள்ளது.

இந்த நிலையில், கர்நாடக துணை முதலமைச்சரும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டுவோம் என்றும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டி.கே.சிவக்குமாரின் இந்த அறிவிப்புக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் இன்று(மே.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும், அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்ததாக இன்று காலை பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.

பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற சிவக்குமார் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன். இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவக்குமார் பதவிப் பிரமானம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.

காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் (uncontrolled intermediate catchment) மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மேகதாது அணை குறித்த டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். டி.கே.சிவக்குமாரின் அறிவிப்புக்கு நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் வெறுமனே கண்டனம் மட்டுமே தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல. இரு மாநில நலன்களுக்கு மாறாக கர்நாடகா அரசு பேசி வருவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களின் அனுமதியின்றி காவிரிக்கு குறுக்கே தன்னிச்சையாக அணை கட்ட முடியாது. ஆனால், கர்நாடகாவில் இருக்கும் அரசுகள் அதனை தொடர்ந்து மீறி வருவது இரு மாநில உறவுகளுக்கும், மக்களுக்கும் நல்லதல்ல.மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக மக்கள், விவசாயிகள் நலன் காக்கவும் உடனே முதலமைச்சர் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிப்பதுடன், மத்திய அரசுடன் பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'மேகதாது அணை' கட்டுவதை திமுகவும் திருமாவளவனும் தடுக்க முடியுமா? சீமான் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.