ETV Bharat / state

கரோனா ஆராய்ச்சி நிதி போலி ஆவணங்கள் தயார் செய்து பயன்படுத்தப்பட்டதா? - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 9:10 PM IST

MHC ordered central govt investigate issue an appropriate order complaint against Siddha doctors for Corona Research Fund
கரோனா ஆராய்ச்சி நிதி போலி ஆவணங்கள் தயார் செய்து பயன்படுத்தப்பட்டதா? விசாரணை செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Corona Fund Misused: கரோனா ஆராய்ச்சி நிதியைப் போலியான ஆவணங்கள் உருவாக்கிப் பயன்படுத்தியதாகச் சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்கள் மீதான புகாரை 3 மாதத்தில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: கரோனா ஆராய்ச்சி நிதியைப் போலியான ஆவணங்கள் உருவாக்கிப் பயன்படுத்தியதாகச் சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்கள் மீதான புகாரை 3 மாதத்தில் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மத்திய அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் குணபாத துறையின் இணைப் பேராசிரியராக பணியாற்றும் சித்த மருத்துவர் எஸ்.விஷ்வேஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனா தொடர்பான ஆய்வுகளை நடத்த, 2020ஆம் ஆண்டில் ரூபாய் 50 லட்சம் நிதியை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் ஒதுக்கீடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிதியைத் தேசிய சித்தா மருத்துவ நிறுவன இயக்குநர் செலவு செய்ய வேண்டிய நிலையில், மருத்துவர்கள் ஆர்.மீனா குமாரி, எம்.மீனாட்சி சுந்தரம், ஜி.ஜெ.கிறிஸ்டியன், பி.சண்முகப்பிரியா, ஏ.மாரியப்பன், வி.சுபா ஆகியோர் இணைந்து, கரோனா குறித்து ஆய்வு செய்ததாகப் போலி ஆவணங்களைத் தயாரித்து, நிதி மோசடி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2022 அக்டோபரில் டெல்லியிலுள்ள தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரிக்குப் புகார் அனுப்பியும், போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக இயக்குநருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே கரோனா ஆராய்ச்சி நிதியைப் போலியான ஆவணங்கள் உருவாக்கிப் பயன்படுத்தியதாகச் சித்த மருத்துவ நிறுவன மருத்துவர்கள் மீது விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் கான்சியஸ் இளங்கோ, மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் குமரகுரு ஆகியோர் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரிடமும், அவர் குறிப்பிடும் மருத்துவர்களிடமும் மத்திய அரசு விரிவான விசாரணை நடத்தி, 12 வாரத்துக்குள் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை இயல்பை விட 17% குறைவு: சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.