ETV Bharat / state

9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

author img

By

Published : Oct 24, 2021, 6:52 AM IST

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 9 மாவட்டங்களுக்கான ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்களை நிரப்பிடுவதற்கான மறைமுகத் தேர்தல்கள் நேற்று முன்தினம் தொடங்கின. இதில் அனைத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடத்திலும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளனர் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் திமுக - 6, இந்திய தேசிய காங்கிரஸ் - 2, விடுதலை சிறுத்தைகள் -1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டையின் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான தேர்தல் மட்டும் அறிவிப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுக 68, அதிமுக - 1, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 1 ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய மூன்று பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை (No Quorum) காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

அதேபோன்று ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில், ராணிப்பேட்டையின் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள இடங்களில் திமுக - 62, இந்திய தேசிய காங்கிரஸ் - 3, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 1 ஆகிய இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

மீதமுள்ள பதவியிடங்களில் 2 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற, 5 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. ஈரோடு, நாமக்கல்லுக்கான மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடத்தில் திமுகவும், கோயம்புத்தூரில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை.

தொடர்ந்து ஆறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பதவியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில், திமுக - 4, இந்திய தேசிய காங்கிரஸ் - 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மீதமுள்ள ஒரு பதவியிடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை. ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் திமுக - 7, அதிமுக - 1, பாட்டாளி மக்கள் கட்சி - 1, சுயேச்சை வேட்பாளர் - 1 ஆகிய இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். எஞ்சிய மூன்று பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

இதையும் படிங்க: தீபாவளிக்கு குறைவில்லாமல் பேருந்துகள் - ராஜகண்ணப்பன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.