ETV Bharat / state

சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை..! மூன்றரை ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 3:47 PM IST

மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய சென்னை - சேலம் விமான சேவை
மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கிய சென்னை - சேலம் விமான சேவை

Chennai - Salem flight Ticket Price : சென்னை - சேலம் இடையே தினசரி நேரடி விமான போக்குவரத்து, மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை: உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து இன்று (அக். 29) காலை சேலத்துக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை உள்பட 43 பயணிகள் பயணித்தனர். சென்னையில் இருந்து சேலம் நகருக்கு ஏற்கனவே ட்ரூஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது.

ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து காரணமாக சென்னை - சேலம் - சென்னை விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. அதன்பின்பு கரோனா வைரஸ் பாதிப்பு நீங்கி, மீண்டும் நாடு முழுவதும் விமான சேவைகள் இயங்கத் தொடங்கின.

ஆனால் சென்னை - சேலம் - சென்னை விமான சேவைகள் மட்டும் மீண்டும் தொடங்கவில்லை. சென்னையில் இருந்து சேலத்திற்கு ஏற்கனவே விமான சேவையை இயக்கி வந்த ட்ரூஜெட் தனியார் விமான நிறுவனம், விமான சேவையை மீண்டும் தொடங்க முன்வரவில்லை. இதனால் சென்னை - சேலம் - சென்னை சேவைகள் இல்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை - சேலம் - சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்தது. அதன்படி இன்று (அக். 29) ஞாயிறு முதல் இந்த விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் தினசரி சேவையாக தினமும் இயக்கப்படுகிறது.

சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் இருந்து இன்று காலை 11:20 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12:30 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றடைந்தது. அதன் பின்பு அதே விமானம் சேலத்தில் இருந்து பகல் 12:50 மணிக்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு பகல் 1:45 மணிக்கு சென்றது.

சேலம் விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்குவதற்கு இன்னும் வசதிகள் செய்யப்படாத காரணத்தால், ஏ.டி.ஆர் எனப்படும் 72 சீட்டுகள் உடைய சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்பட உள்ளது. சென்னை - சேலம் - சென்னை இடையேப் தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு விமான சேவை மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகளிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஒரு நாளைக்கு இரண்டு விமான சேவைகளாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை - சேலம் இடையே ஒரு வழிப் பயணத்திற்கு கட்டணமாக 2 ஆயிரத்து 390 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயணிகளின் கூட்டத்திற்கு தகுந்தார் போல கட்டண விகிதத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பயணம் செய்யும் நாளுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால், குறைந்தபட்ச கட்டண டிக்கெட்டான ரூ.2 ஆயிரத்து 390 விலையில் டிக்கெட் கிடைக்கும் என்று விமனா நிறுவன அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இன்றைய தினம் சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டு சென்ற முதல் விமானத்தில், கோவா மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை உள்பட, 43 பயணிகள் பயணித்தனர்.

இந்த முதல் விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளுக்கு, ரோஜா பூக்கள் கொடுத்து வரவேற்கப்பட்டது. விமான நிலையத்தில், சேலம் விமானத்தில் பயணிகள் ஏறச் செல்லும் வழியில் பலூன்கள் தோரணங்களாக கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: சோவியத் முதல் ராஜ்பவன் வரை.. பெட்ரோல் குண்டு கடந்து வந்த பாதை...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.