ETV Bharat / state

தமிழ்நாட்டின் 9 தொகுதிகளில் பாஜக தீவிர கவனம்: எல்.முருகன் கருத்தால் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

author img

By

Published : Apr 2, 2023, 4:20 PM IST

Minister L MURUGAN
மத்திய இணையமைச்சர் எல் முருகன்

தமிழ்நாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை உட்பட 9 தொகுதிகளில் பாஜக தீவிர கவனம் செலுத்தி வருவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருப்பது, அதிமுக - பாஜக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவில் இருந்த பிரமுகர்கள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகிகள் சிலர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தினர். இதனால் இருகட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால், பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும், சாதாராண தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன் எனவும் அண்ணாமலை அறிவித்தார். இதை வரவேற்பதாக அதிமுகவை சேர்ந்த சிலர் கூறினர். இதற்கிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாக கூறி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அண்ணாமலையின் தனித்துப்போட்டி என்கின்ற நிலைப்பாட்டை ஏற்க மறுத்த பாஜக மேலிடம், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல் 2) சக்தி கேந்திரா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 150 தொகுதிகளில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தென் சென்னை தொகுதி உட்பட 9 தொகுதிகளில் தீவிர கவனம் செலுத்துகிறோம். அதிமுக, பாஜக கூட்டணி வலுவாக உள்ளது" என கூறினார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன், ஜெயவர்தன் போட்டியிட்டார். ஆனால் வரும் தேர்தலில், தென் சென்னை தொகுதியில் பாஜக தீவிர கவனம் செலுத்தி வருவதாக எல்.முருகன் குறிப்பிட்டிருப்பது கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுக-பாஜக கூட்டணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடுத்தியுள்ளார். தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் விரும்பிய தொகுதிகளை கேட்பது மரபு. ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தான் முடிவு செய்ய வேண்டும்" என கூறினார்.

இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறதா என்பதை இன்னும் இறுதி செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீடு, தொகுதி எண்ணிக்கை ஆகியவை குறித்த பேச்சுவார்த்தை மூலமே கூட்டணி உறுதி செய்யப்படும். எல்.முருகன் கூறிய கருத்து நாடு முழுவதும் 150 தொகுதிகளில் 9 தொகுதிகளில் பாஜக தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்பதுதான். அது எங்கள் கட்சியின் மேலிட முடிவு. தமிழ்நாட்டில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார். இதன் மூலம், தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை அண்ணாமலை மாற்றிக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "சமூக நீதியை அடைய கல்வியை தவிர வேறு பாதை இல்லை" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.