ETV Bharat / state

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

author img

By

Published : Aug 12, 2023, 7:00 AM IST

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி 2023
Asia champions trophy hockey 2023

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற இந்தியா, ஜப்பான் இடையேயான அரையிறுதிப் போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது ஹாக்கி சம்பியன்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா ஆகிய அணிகள் லீக் ஆட்டத்தில் மோதின.

லீக் ஆட்டத்தின் முடிவில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான் என நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் இந்தியா, ஜப்பான் அணிகளுக்கு இடையேயான அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதல் 15 நிமிடத்தில் இரண்டு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. முதல் கால் மணி நேரத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்தியா தவறவிட்டது. இதனை அடுத்து 2வது கால் மணி நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் வீரர் ஆகாஷ்தீப் சிங், 19வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதையும் படிங்க: 2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!

இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து, 23வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். மீண்டும் தொடர்ந்து 2வது கால் மணி நேரத்தின் கடைசி நிமிடமான 30வது நிமிடத்தில் இந்திய அணியின் வீரர் மந்தீப் சிங் கோல் அடித்தார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் அடித்து போட்டியை தன்வசமாக்கி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 39வது நிமிடத்தில் கோல் அடித்தது. இதனை இந்திய வீரர் சுமித் அடித்தார். இதன் தொடர்ச்சியாக, 4வது கால் பகுதியின் 51வது நிமிடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய அணியின் வீரர் கார்த்திக் கோல் அடித்தார். கடைசி வரை போராடிய ஜப்பான் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

லீக் ஆட்டத்தின்போது இந்தியா, ஜப்பான் இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்யப்பட்டது. அப்போது 15 பெனால்டி கார்னர் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தும், அதை இந்திய அணி தவற விட்டது. ஆனால், இன்று நடைபெற்ற அறையிறுதிப் போட்டியில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்தியா அருமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

இதற்கு முன்பாக நடைபெற்ற மலேசியா, கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியில் கொரிய அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மலேசிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மலேசியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று (ஆகஸ்ட் 11) முதலாவதாக நடைபெற்ற பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான 5 மற்றும் 6வது இடத்திற்கான போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனால், பாகிஸ்தான் 5வது இடத்தையும், சீனா 6வது இடத்தையும் பெற்றுள்ளன.

நாளை (ஆகஸ்ட் 13) இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. அதே போன்று, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான 3 மற்றும் 4வது இடங்களுக்கான போட்டியும் நடைபெற உள்ளது. நாளை இறுதிப் போட்டி என்பதால் ஆட்டம் கடுமையாக இருக்கும் என ஹாக்கி ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை:இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் தேதி மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.