ETV Bharat / state

எண்ணூர் அம்மோனியம் வாயு கசிவு: மீண்டும் ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 8:38 PM IST

தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமை தீர்ப்பாயம்

Ammonia Gas leak Ennore: அம்மோனியம் வாயு வெளியேற்றம் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் படி கடல்சார் வாரியம் மற்றும் தொழில் பாதுகாப்புத்துறைக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து டிச.26ஆம் தேதி நள்ளிரவு 11.45 மணியளவில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. வாயு கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஆலையைத் தற்காலிகமாக மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு, "தவறு செய்தது அரசாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என ஜனவரி 2ஆம் தேதி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (ஜன.08) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கோரமண்டல் நிறுவனம் சார்பில், வாயு வெளியேற்றத்துக்கான காரணம் குறித்தும், 1996 முதல் இதுபோன்ற விபத்து நடைபெற்றதில்லை. அதனால், மீண்டும் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்படவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடல்சார் வாரியம் மற்றும் தொழில் பாதுகாப்புத்துறை சார்பில், வாயு கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அம்மோனியம் கசிவால் பல்லுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஆலையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தீர்ப்பாயம், அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையைப் பிப்ரவரி 06ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம்: அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.