ETV Bharat / state

தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம்: அரசு தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 6:53 PM IST

Thamirabarani flood water canal project: தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டமான தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரிய மனுவில் அரசு தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Thamirabarani flood water canal project
தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம்

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அன்புராஜ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பொழியும் மழைநீர் தாமிரபரணி ஆற்றல் கலக்கிறது. பின்னர் தாமிரபரணி ஆறு வழியாக அனைத்து நீரும் கடலில் கலக்கிறது.

இதனால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொழியும் மழைநீர் சுமார் 13,000 கன அடி நீர் ஸ்ரீ வைகுண்டம் அணையில் இருந்து கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்குக் கோடைக் காலங்களில் நிலத்தடிநீர் குறைந்து சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தாமிரபரணி ஆற்றில் உள்ள உபரிநீரை நம்பியாறு மற்றும் கருமேனி ஆற்றை இணைத்து கால்வாய் அமைத்து அதன் மூலம் விவசாயத்திற்கு அந்த நீரைப் பயன்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டு வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது வரை அதற்கான பணிகள் நிறைவடையவில்லை. இதனால் வெள்ளநீர் ஆற்றில் கலந்து எந்த பயனும் இல்லாமல் பின்னர் கடலில் கலக்கிறது. எனவே தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு , நம்பியாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைத்து தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டத்தை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைத்து மேற்கொள்ளப்படும் தாமிரபரணி வெள்ள நீர் கால்வாய் திட்டம் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்த திட்டத்தில் மொத்தமுள்ள 4 கட்ட பணிகளில் 3 கட்ட பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. நிலம் கையகப்படுத்தியதில் தனிநபர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் திட்டம் நிறைவடையக் காலதாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், தனிநபர் தொடர்ந்த வழக்கை இந்த வழக்குடன் பட்டியலிடவும், அரசு தரப்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக வைத்தீஸ்வரன், சட்டைநாதர் கோயில்களில் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.