ETV Bharat / state

சீமானை கைது செய்யக்கோரி பேரணி; ஆதிதமிழர் கட்சி அறிவிப்பு

author img

By

Published : Mar 8, 2023, 10:24 PM IST

Etv Bharat
Etv Bharat

சீமானை கைது செய்யக்கோரி டிஜிபி தலைமை அலுவலகம் நோக்கி நீல சட்டை பேரணி நடத்த இருக்கிறோம் என்று ஆதிதமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கு.ஜக்கையன் தெரிவித்துள்ளார்.

சீமானை கைது செய்யக்கோரி பேரணி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையானது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். ஈரோடு கிழக்கில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்காளர் உள்ளனர். இடைத்தேர்தல் பரப்புரை நடைபெற்ற போதே சீமானுக்கு எதிராக அருந்ததியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு சீமான் பரப்புரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது சீமான் மீது SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆதிதமிழர் கட்சியின் சார்பில் கடந்த 6ஆம் தேதி போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியினர் ஆதிதமிழர் கட்சியினரை தாக்கியதாக அக்கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கு அருந்ததியர்களை தவறாக பேசவில்லை எனவும் வரலாற்று உண்மையை தான் பேசினேன் எனவும் சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், அருந்ததியர்களை தவறாக பேசியதாக அந்த மக்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிதமிழர் கட்சியின் நிறுவன தலைவர் கு.ஜக்கையன், "சீமான் தொடர்ந்து அருந்ததியர் மக்களின் மீது அவதூறு பரப்பி வருவதால், அவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், இன்று (மார்ச் 08) வரை கைது செய்யாமல் உள்ளதை கண்டிக்கும் விதமாகவும், அவரை கைது செய்யும் வரை அடுத்தகட்ட தொடர் போராட்டங்களை அறிவிக்க அறிவிக்க இருக்கிறோம். சீமான் மீது SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தும் இதுவரை கைது செய்யாமலிருக்கின்ற தமிழ்நாடு அரசு உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்திகின்றோம்.

தொடர்ந்து அருந்ததியர் சமூகத்தை இழிவுபடுத்துகின்ற சீமான் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திகின்றோம். வரலாறு குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்திட சீமான் தயாரா என ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் சவால் விடுகிறேன். சீமானைக் கைது செய்ய வலியுறுத்தி வரும் 15ஆம் தேதி தமிழ்நாடு டி.ஜி.பி. தலைமை அலுவலகம் நோக்கி நீல சட்டை பேரணி நடத்துவது என அறிவிக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியினர் எங்கள் கட்சியினரை தாக்கியதற்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் மேற்கொள்வோம்" என கூறினார்.

இதையும் படிங்க: "நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா" - நடிகர் விஷால் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.