ETV Bharat / state

பச்சை உறை பாலை நிறுத்தும் ஆவின்... முறைகேடுகள் தான் காரணம் என்கிறார் அன்புமணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 1:20 PM IST

தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் தேதியுடன் நிறுத்த, ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss
அன்புமணி ராமதாஸ்

சென்னை: ஆவின் நிறுவனம் கடுமையாக நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை 10 லட்சம் லிட்டருக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதன் கொள்முதல் வழக்கமான அளவை விட சுமார் 10 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட வெளியிட்ட இன்றைய(நவ 20) அறிக்கையில், " தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் தேதியுடன் நிறுத்தி,அதற்கு மாறாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இந்த மாற்றம் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.

மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு நுண்ணூட்டச் சத்து நிறைந்த பாலை தர வேண்டும் என்ற எண்ணமும், ஆவின் டிலைட் பாலில் நுண்ணூட்டச் சத்துகளும் இருந்தாலும், அந்த வகை பாலை ஏற்கனவே இருக்கும் ஆவின் நீலம், பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பால்களுடன் கூடுதலாக அறிமுகம் செய்திருக்க வேண்டும். ஆவின் பச்சை உறை பாலை நிறுத்தி விட்டு டிலைட் பாலை அறிமுகம் செய்திருக்கக் கூடாது.

ஆவின் ஆலைகளில் பதப்படுத்தப்படும் பாலில் கொழுப்புச்சத்துக் குறைவாக இருப்பதால், அதன் கொழுப்புச் சத்தை 4.5% என்ற அளவுக்கு உயர்த்த ஆண்டுக்கு ரூ.840 கோடி அளவுக்கு வெண்ணெய்யை வாங்கி பாலுடன் சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் கூடுதல் செலவை தவிர்ப்பதற்காகத் தான் பச்சை உறை பால் உற்பத்தி மற்றும் விற்பனையை ஆவின் நிறுவனம் நிறுத்தியிருக்கிறது.

3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் டிலைட் பாலுக்கு, 4.5% கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையையே வசூலிப்பது மறைமுகமான விலை உயர்வு ஆகும். இதனால், ஆவின் பால் வாடிக்கையாளர்கள் தனியார் பாலை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. அதற்காகத் தான் ஆவின் இப்படி செய்கிறதா?. ஆவின் நிறுவனம் கடுமையாக நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விற்பனை 10 லட்சம் லிட்டருக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதன் கொள்முதல் வழக்கமான அளவை விட சுமார் 10 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த நேரிடும். இந்த நிலையை மாற்ற பால் கொள்முதலையும், கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50% ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியின் வகுப்பறையில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை.. ராமநாதபுரத்தில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.