ETV Bharat / bharat

28 பேர் உயிரை காவு வாங்கிய ராஜ்கோட் தீ விபத்து.. அரங்கில் தீப்பற்றியது எப்படி? - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - CCTV Of Rajkot Fire Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 11:41 AM IST

CCTV Footage Of Rajkot Fire Accident: குஜராத் மாநிலம் ராஜ்கோட் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், தீ விபத்து நிகழ்ந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

CCTV Footage Of Rajkot Fire Accident
ராஜ்கோட் தீ விபத்து தொடர்பான சிசிடிவி (Credits: ETV Bharat)

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா மாவா சாலையில் உள்ள ஒரு விளையாட்டு வளாகத்தில் நேற்றைய முன்தினம் (மே 25) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ராஜ்கோட் தீ விபத்து தொடர்பான சிசிடிவி (Credits: ETV Bharat)

இந்த தீ விபத்தில் இதுவரை குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்தில் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று முன்தினம் (25.05.2024) பிற்பகல் வேளையில் டிஆர்பி விளையாட்டு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட உடன் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாகவும், தொடர்ந்து தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜூ பர்கவா தெரிவித்துள்ளார்.

இதுமட்டும் அல்லாது, இந்த விளையாட்டு வளாகத்தின் உரிமையாளரான யுவராஜ் சிங் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக, 6 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நியமிக்கப்பட்டுள்ளது என்றும் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், விளையாட்டு வளாகத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளன. அப்படி வெளியாகியுள்ள அந்த சிசிடிவி காட்சியில், டிஆர்பி விளையாட்டு வளாகத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு பதிவான காட்சிகள் உள்ளன.

அதில், முதல் தளத்தின் மேற்கூரையில் வெல்டிங் பணி நடப்பதையும், கீழே தரையில் சில பிளைவுட் ஷீட்கள் உள்ளதையும் காணமுடிகிறது. மேலும், வெல்டிங் பணியின் போது வெளிப்பட்ட தீப்பொறிகள், கீழே தரையில் வைக்கப்பட்டிருந்த பிளைவுட் ஷீட்களில் விழுந்து தீ பற்றத் தொடங்குகிறது. அப்போது, ​​​​அங்கு பணியாற்றும் சில ஊழியர்கள் அந்த தீயை அணைக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் சிறிது நேரத்தில் பெரிய அளவிலான தீ உருவாகி முழு விளையாட்டு வளாகமே தீ விபத்தில் சிக்கும் காட்சிகள் அந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பலி.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.