ETV Bharat / state

இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய மேலும் 49 தமிழர்கள்..! மற்றவர்களையும் அழைத்து வர ஏற்பாடு - அமைச்சர் தகவல்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:52 PM IST

Etv Bharat
Etv Bharat

Tamil people rescued from Israel: இஸ்ரேலில் இருந்து இரண்டாம் கட்டமாக 49 தமிழர்கள் தாயகம் திரும்பி உள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குள் மீதமுள்ள மக்கள் தாயகம் திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பிய மேலும் 49 தமிழர்கள்

சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு "ஆப்ரேஷன் அஜய்" திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 2வது கட்டமாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அதிகாலை 2:35 மணி அளவில் பலர் நாடு திரும்பினர்.

இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேர் வந்தனர். இதில் 2 குழந்தைகள், 9 பெண்கள் உள்பட 16 பேர் 2 விமானங்களில் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், "இஸ்ரேல்- பாலஸ்தீன போரால் நடைபெறும் அசாதாரண சூழலில் தமிழர்கள் பாதிக்காத வகையில் மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். மத்திய அரசுக்கு முதலமைச்சர் கொடுத்த அழுத்தத்தால் தொடர்ந்து 2 நாட்களாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேலில் இருந்து தமிழர்களை மீட்டு வந்து டெல்லி வரையிலும் அழைத்து வந்து சேர்க்கின்ற பணியை மத்திய அரசு செய்கின்றது. டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு அழைத்து வருகிற பணியை தமிழக அரசு சார்பாக செய்யப்படுகிறது. முன்னதாக 49 பேர் அழைத்து வரப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசின் செலவில் இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.

இதுவரையிலும் தமிழகத்தைச் சேர்ந்த 128 பேர் பதிவு செய்திருக்கின்றார்கள். அதில் 49 பேர் தற்போது வந்துள்ளார்கள். மீதமுள்ள மக்களும் வர உள்ளார்கள். இதனிடையே 12 பேர் தங்களின் சொந்த செலவில் நேரடியாக நாடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள மக்கள் இன்று இரவும், நாளை அதிகாலையும் வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெர்வித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், "இஸ்ரேலில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த மக்களிடம் எல்லோரிடத்திலும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளும் போது, தாங்கள் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும், தங்களுடன் வசிக்கும் மற்ற நாட்டவர்கள் அழைத்துச் செல்லப்படுவதால் தனியாக இருப்பதில் அச்சம் ஏற்பட்டுள்ளது, அதனால் தாயகம் திரும்ப விரும்புகிறோம் என தெரிவித்ததன் அடிப்படையில் அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.

இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய குணசேகரன் என்பவர் கூறுகையில், "தமிழக அமைச்சர் இந்திய தூதரகம் மூலம் பேசி, அங்கு இருப்பவர்களின் நிலைமையை குறித்து கேட்டறிந்தார். 7ஆம் தேதி அன்று காலை தான் மிக மோசமான நாளாக இருந்தது. நான் நான்கு ஆண்டுகளாக அங்கு இருந்தேன், இதுவரை அப்படியொரு போரை பார்த்ததில்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீயணைப்புதுறைக்கு நவீன ட்ரோன், ரோபோட் வாங்க திட்டம்..! தீயணைப்பு துறை இயக்குனர் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.