ETV Bharat / state

செங்கல்பட்டில் பேட்டரி டெஸ்ட் லேபை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By

Published : Jul 31, 2023, 6:22 PM IST

tamilnadu
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நிறுவியுள்ள 210 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி அடைய வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கினை எட்டவும் தமிழகத்தில் சமச்சீரான பொருளாதாரம் மற்றும் இளைஞர்களுக்கான ஏராளமான வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

இந்த நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு செங்கல்பட்டு மஹிந்திரா சிட்டியில், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்புக்கென மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தை 125 ஏக்கர் பரப்பளவில் நிறுவியது. இது உலக அளவில் மோட்டார் வாகனம் மற்றும் டிராக்டர் தயாரிப்புகளின் முதலாவது ஒருங்கிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. இங்கு தங்கள் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்களையும், டிராக்டர்களையும் இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் செய்யார் சிப்காட் தொழில் பூங்காவில், 454 ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்கான சோதனை தடத்தையும் அமைத்துள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இந்நிறுவனம் தமிழகத்தில் கூடுதலாக 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், குறைந்தது 850 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும் உறுதி அளித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டில் அமைந்துள்ள மஹிந்திரா சிட்டியில் 210 கோடி ரூபாய் முதலீட்டில் மின்கலன் பரிசோதனை ஆய்வகம் ஒன்றை அமைத்திருந்தது. இந்த மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜூலை 31) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆய்வகத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததோடு, செய்யார் சிப்காட் தொழில் பூங்காவில் மின்வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் மற்றும் மின்கலன் கட்டுருவாக்க மையம் நிறுவும் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எல்லாமே இலவசம்!... நீங்க வந்தா மட்டும் போதும்... சென்னை மாநகராட்சியின் அதிரடி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.