ETV Bharat / state

தருமபுரம் ஆதீனம் விவகாரம்; பாஜக நிர்வாகிகள் இருவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி! - Dharmapuram Adheenam Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 5:03 PM IST

BJP executives bail petition dismissed: தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ, ஆடியோ மிரட்டல் விடுத்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகள் இருவரின் ஐந்தாவது ஜாமீன் மனுக்களை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தருமபுரம் ஆதீனம், விக்னேஷ் மற்றும் வினோத் ஆகியோரின் புகைப்படங்கள்
தருமபுரம் ஆதீனம், விக்னேஷ் மற்றும் வினோத் ஆகியோரின் புகைப்படங்கள் (Credits to ETV Bharat Tamil Nadu)

நாகப்பட்டினம்: தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பாஜக நிர்வாகிகள் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரின் ஐந்தாவது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், மயிலாடுதுறை பாஜக தலைவர் அகோரம், பாஜக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, ஶ்ரீநிவாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ஶ்ரீநிவாஸ்-க்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில், வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஐந்தாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வினோத் மற்றும் விக்னேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 75 நாட்களாக சிறையில் இருப்பதாகவும், விசாரணை முடிவடைந்து விட்டதாகவும், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரான ஸ்ரீநிவாஸ் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்படி இரு நபர்களுக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி வாதிட்டனர்.

இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான மாவட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டாக்டர்.இராம.சேயோன், சென்னை உயர் நீதிமன்றத்தால் வழக்கில் சம்பந்தப்பட்ட குடியரசு மற்றும் அகோரம் ஆகியோர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் நான்காவது முறை ஜாமீன் கேட்டு சென்ற வாரம் விண்ணப்பித்த போது இருந்த நிலவரத்தில், தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார்.

மேலும், வழக்கில் தொடர்புடைய முக்கியமாக நான்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும், விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தின் முன் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி மேற்படி இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ய வாதிட்டார்.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி, சென்ற வாரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவிற்கும், தற்போதைய ஜாமீன் மனுவிற்கும் இடைப்பட்ட காலத்தில் வழக்கில் எந்த மாற்றமும் இல்லை, ஏனைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வழக்கின் விசாரணை முற்றுப் பெறவில்லை ஆகிய அரசுத் தரப்பு வாதங்களை ஏற்று இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனகர்த்தரின் உதவியாளர் அதிரடி பணி நீக்கம்: காரணம் என்ன? - Dharmapuram Adheenam Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.