ETV Bharat / sports

Captain MSD Returns: தோனிதான் வாராரு.. மாற்றம் காணுமா மஞ்சள் படை.. முதல் சம்பவம் ஹைதராபாத்தா?

author img

By

Published : May 1, 2022, 11:41 AM IST

Captain MSD Returns
Captain MSD Returns

மீண்டும் சிஎஸ்கே அணியை தோனியே வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இனி வரும் போட்டிகளில் டாஸ் போடும்போதும், போட்டி முடிந்த பின் தொகுப்பாளரிடம் பேசும்போதும் தோனிதான் வரப்போகிறார்.

ஐபிஎல் தொடர்களில் மிகவும் வெற்றிகரமான அணிகளுள் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏறத்தாழ அனைத்து சீசன்களுக்கும் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்தார். 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு முதுகெலும்பாக விளங்கியவர் தோனி.

தோனிதான் வாராரு...: அந்த வகையில், நடப்பு தொடர்தான் தோனியின் கடைசி தொடராக இருக்கும் என பல அனுமானங்கள் வெளியான நிலையில், இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முந்தைய நாள் அதாவது மார்ச் 25ஆம் தேதி, தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். இது பல்வேறு வகையான கருத்துகளை பெற்றாலும், சிஎஸ்கேவின் தற்போதைய தொடர் தோல்விகள் இந்த முடிவின் மீது பெரும் கேள்விகளை ஏற்படுத்தியது.

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலாக, மீண்டும் சிஎஸ்கே அணியை தோனியே வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், இனி வரும் போட்டிகளில் டாஸ் போடும்போதும், போட்டி முடிந்த பின் தொகுப்பாளரிடம் பேசும்போதும் தோனிதான் வரப்போகிறார். தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும், அணியில் பல முக்கிய முடிவுகள் அவரின் ஒப்புதலுடனே எடுக்கப்பட்டு வந்தது.

பதற்றத்தில் ஜட்டு: ஆனால், தோனி கேப்டனாக வந்தால் சிஎஸ்கேவின் எனர்ஜி லெவல் வேறுதான். அதனால்தான், ஜடேஜா மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடமே ஒப்படைத்துள்ளார். தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தவும், அதை மேம்படுத்தவும் கேப்டன் பொறுப்பை துறப்பதாக அறிவித்திருக்கிறார் ஜட்டு. ஆம், அதுவும் ஒருவகையில் உண்மைதான் விளையாடிய 8 போட்டிகளில் 112 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் மட்டும் அவர் எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பல கேட்ச்களையும் அவர் தவறவிட்டார், அப்போதே வெளிப்பட்டுவிட்டது ஜட்டூவின் பதற்றம்.

சிஎஸ்கேவின் ஆல்-ரவுண்டர் பதற்றத்திற்கு ஆளானால் அது ஒட்டுமொத்த அணியின் சமநிலையையே பாதிக்கும் என்பதற்கு இந்த தொடர் சிறந்த உதாரணம். ஜடேஜாவிற்கு பதில் ராயுடு அல்லது வேறு யாருக்காவது இந்த பொறுப்பை கொடுத்தாலும் அது சரிப்பட்டு வருமா என்ற யோசனையும் கூடவே வரும். அதனால்தான், தற்போதைய சிஎஸ்கேவின் பிரச்சினைக்கு சிறந்த மருந்து தோனியை மீண்டும் கேப்டனாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.

மாற்றம் காணுமா மஞ்சள் படை: ஹைதாராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தோனி மீண்டும் கேப்டனாக களம் காண்கிறார். ஹைதாராபாத் அணியன் முரட்டு பந்துவீச்சையும், நேர்த்தியான பேட்டிங் படையும் தோனி எப்படி சந்திக்கப்போகிறார்; இன்றைய பிளேயிங் லெவனில் எப்படிப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம் போன்ற கேள்விகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.

இது எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் எந்த விதத்தில் மாற்றமடைய போகிறது என்பதைக் காணவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நேற்று மாலை வரை கேன் vs ஜடேஜா என பேசப்பட்ட வந்த போட்டி நேற்றிரவில் இருந்து கேன் vs தோனி என மாறியிருக்கிறது. இந்த மாற்றம் சிஎஸ்கேவை மீண்டும் பழைய பார்மிற்கு கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி புனே எம்சிஏ மைதானத்தில் இன்று (மே1) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

இதையும் படிங்க: MSD THE FINISHER: சர்வதேச போட்டிகளில் இருந்துதான் ஓய்வு : ஃபினிஷிங்கில் இல்லை - மீண்டும் கலக்கிய தல தோனி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.