ETV Bharat / sitara

என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு...! 'அசுரன்' படத்துக்கு சீமானின் வாழ்த்து மடல்!

author img

By

Published : Oct 24, 2019, 2:00 AM IST

இயக்குநர் வெற்றிமாறன் - சீமான்

'அசுரன்' திரைப்படம் உருவாவதற்கு முன்பே இக்கதையை என்னிடம் நீ கூறியபோது, நான் அடைந்த பிரமிப்பைவிட திரைப்படம் பன்மடங்கு வியப்பையும், திகைப்பையும் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்துக்கு இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.!

வணக்கம். அசுரன் திரைப்படத்தைக் கண்டேன். பிரமிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அந்த மாபெரும் அனுபவத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை என்றே கூற வேண்டும். என் தம்பி இயக்கிய இத்திரைப்படத்தை மனநிறைவோடு நான் கண்டபோது, 'நீ என் தம்பி' என்பதில் பெருமிதமும், பெருந்திமிரும் அடைந்தேன்.

படத்தின் தொடக்கத்தில் ஒரு நீரோடையில் கால் எடுத்து வைக்கிற சிவசாமியின் கால்களைக் காட்டுகிற அந்த முதல் காட்சியில் இருந்து, ஒரு நிறைவானப் புன்னகையோடு தன் மனைவியையும், மகனையும் பார்த்தவாறே சிவசாமி பிரிகிற அந்த இறுதிக்காட்சி வரை விழி அகலாமல் பார்வையாளர்களைப் பார்க்க வைக்கிற உனது நேர்த்தியான இயக்கமாகட்டும்! ஒளிப்பதிவின் நுட்பமான கோணங்களாகட்டும்! உன் அண்ணன் வியந்துபோய்விட்டேன்.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

குறிப்பாக, இத்திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷின் ஆற்றல்மிக்கப் பங்களிப்பு இத்திரைப்படத்தை யாரும் எட்ட முடியாத உயரத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டது என்றால், அது மிகையல்ல!

இந்த இளம் வயதிலேயே மிகுந்த திறமை வாய்ந்த ஆளுமையாக தம்பி தனுஷ் திரைத்துறையில் வளர்ந்து கொண்டிருப்பது கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன். பல நடிகர்கள் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடிப்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால், தனுஷ் அதற்கு பன்மடங்கு மேலே சென்று சிவசாமியாகவே உருமாற்றம் அடைந்து வாழ்ந்திருக்கிறார். வசன உச்சரிப்பு, நடை, உடை, பாவனைகள், முகத்தில் காட்டக்கூடிய சிறுசிறு உடன் உணர்ச்சிகள் என்று மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இத்திரைப்படத்தில் மகத்தானதொரு கலைச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். எந்தக் கதாநாயகனும் நடிக்கத் தயங்கும் அந்த வயதானக் கதாபாத்திரத்தை ஏற்று, அதனுள் முழுமையாகப் பொருந்தி, சிவசாமியாகவே கண்ணில் நிற்கிறார் தம்பி தனுஷ். அந்த அடர்த்தியான மீசைக்குள் அந்த கறைப்படிந்த பல்லை பொருத்திக்கொண்டு, கோபமான தருணங்களில் மீசையை நீவியவாறே கண்விழிப் பிதுங்க ஆவேசமாக அவர் பாய்கின்ற காட்சிகளில், பிரமிப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்டேன்.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

அமைதியாகக் காட்சியளிக்கும் தனுஷ் வலி தாங்க முடியாமல் பொங்கியெழுந்து திருப்பி அடிக்க வருகிறபோது அரங்கமே அதிர்கிறது. பன்னெடுங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் பொறுத்துக்கொண்ட ஒரு சமூகம், 'திருப்பி அடிக்க யாராவது வரமாட்டார்களா?' என்று கண்ணீரோடும், ஏக்கத்தோடும் காத்திருக்கும்போது திருப்பி அடிக்க ஆவேசமாகச் சிவசாமி திரையில் வருகிறபோது வலி நிறைந்த நம் ஆழ்மனது விடை தேடிக்கொள்வது போல, அந்தக் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

நம் சமகாலத்தில் வாழ்கின்ற மகத்தானக் கலைஞனாக இத்திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்திருக்கிற தம்பி தனுஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்! நடுநடுவே அவர் நடிக்கிற வணிக ரீதியிலான திரைப்படங்களை குறைத்துக்கொண்டு 'அசுரன்' போன்று காலம் கடந்து நிற்கக்கூடிய உன்னத திரைப்படங்களை தேர்வுசெய்து நடித்து பெரும் புகழடைய வேண்டுமென எனது விருப்பத்தையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.

அதேபோல, பச்சையம்மாள் ஆக நடித்த மஞ்சு வாரியர், தாய்மாமனாக நடித்த பசுபதி, எனது ஆருயிர் நண்பர் பிரகாஷ்ராஜ், இயக்குநர் வெங்கடேஷ், 'ஆடுகளம்' நரேன், தம்பி பவன் என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களாகவே பொருந்திப் போய் இத்திரைப்படத்தை மாபெரும் காவியமாக மாற்றத் துணை நின்றிருக்கிறார்கள்.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

சிவசாமியின் மகன்களாக நடித்திருக்கிற தம்பி டீஜே அருணாச்சலம், என் தம்பி கருணாசின் மகனான நமது பிள்ளை கென் கருணாஸ் ஆகியோருக்கு இதுதான் முதல் திரைப்படம் என்பதை நம்பமுடியாத அளவுக்கு மகத்தான பேராற்றல் கொண்ட நடிப்பை இத்திரைப்படத்தின் மூலமாக வழங்கியிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் உயிரோட்டமாக ஒவ்வொரு காட்சியிலும் தேர்ந்த இசையை உலவ விட்டிருக்கிற என் ஆருயிர் இளவல் ஜி.வி பிரகாசுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பல உச்சங்களை அவனது வாழ்வில் அடைய வேண்டுமென உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

பாடல் வரிகளை உயிர் ஆழத்தோடு எழுதிய என் தம்பிகள் யுகபாரதி, ஏகாதேசி, அருண்ராஜா காமராஜ், ஏக்லாத் ஆகியோர் மிகச்சிறப்பான தமிழை வழங்கித் திரைப்படத்தை முழு தகுதிபடுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, 'எள்ளு வயல் பூக்கலையே' என்ற பாடலின் வரிகளை சிறப்பாக எழுதிய என் தம்பி யுகபாரதி, ஒரே பாடலில் ஒரு வாழ்க்கையையே வடித்துக் காண்பித்து விட்டான். அதைத் தம்பி தனுஷ் தன் குரலில் பாடியது மனதை நெகிழச்செய்கிறது.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

என் தம்பி வெற்றிமாறனின் கண்களாகவே மாறி ஒளிப்பதிவு செய்திருக்கும் வேல்ராஜின் பங்களிப்பு இத்திரைக்காவியத்தில் அளப்பெரியது. அக்காலத்து ஆயுதங்களான வீச்சரிவாள், கத்தி, வேல்கம்பு போன்றவற்றை நுட்பமாக உருவாக்கி அக்காலக்கட்டத்தை கண் முன்னே காட்சிகளாகக் கொண்டு வந்து சேர்த்தக் கலை நுட்பமும், திரைப்படத்தை உருவாக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் களத்தேர்வு என கலை இயக்குநர் தம்பி ஜாக்சனின் பங்களிப்பு இத்திரைப்படத்தை மகத்தான உருவாக்கமாக வெளிப்படுத்துவதில் முதன்மைப் பங்குவகிக்கிறது.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

காட்சிகளை மிகச்செறிவோடும், நேர்த்தியோடும் வரிசைப்படுத்தி அடுக்கி மிகச்சிறப்பானதொரு படத்தொகுப்பை செய்திருக்கிற தம்பி ராமரின் பங்களிப்பு மகத்தானது. உண்மையானக் காட்சிகளாகவே அமைந்திருக்கும் ஆவேசமான சண்டைக்காட்சிகளை அமைத்துத், திரையரங்குகளை அதிர செய்த சகோதரர் பீட்டர் ஹெய்னுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஆகச்சிறந்ததொருப் படைப்பை உருவாக்குவதில் அவரவர் தங்களது முழு திறமையையும் வெளிக்காட்டி மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

அநீதிகளுக்கு எதிரான சீற்றத்தை இத்திரைப்படத்தின் உரையாடல்கள் எங்கும் காணலாம். காலில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாது என்று சொல்கிற சாதிய இறுக்கத்தை அதே செருப்பைக் கொண்டு அடித்து, சாதிய ஆதிக்கத்திமிரை வீழ்த்தும் காட்சியில் திரையரங்கே அதிர்கிறது. அடக்கி ஒடுக்கப்பட்டத் தமிழ்ச்சமூகத்தின் எழுச்சி, அந்தச் செருப்படியின் சத்தத்தில் தெறிக்கிறது; ஆண்டாண்டு காலமாக அடக்கியாண்ட சாதியத்தைச் சிதறடித்து முடிக்கிறது.

இளம்பெண்ணின் தலையில் செருப்பை வைத்து சாதியவாதிகள் நடக்கச் சொல்கிற காட்சி, அளப்பெரும் ஆத்திரத்தையும், கடும் கோபத்தையும் நம்முள் ஏற்படுத்தி பார்ப்போர் எவரிடமும் சாதியத்தின் கொடுமையை எளிதாகக் கடத்துகிறது. பெண்கள் மாராப்பு சேலை அணியக்கூடாது; ஆண்கள் முட்டிக்குக் கீழே வேட்டியைக் கட்டக்கூடாது; எச்சிலைத் தரையில் துப்பக்கூடாது; செருப்பு அணியக்கூடாது என்று பன்னெடுங்காலமாக நிலவி வந்த சாதியத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய நமது முன்னோர்களைத் திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிற, அக்காலப் போராட்டங்களின் ஒரு குறியீடாகவே இப்படத்தைப் பார்க்கிறேன். சிவசாமி சாதிய ஆதிக்கவாதியை உதைக்கின்ற உதை என்பது நீண்ட நெடுங்காலமாக நம்மை வீழ்த்திப் போட்டிருக்கிற சாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

பஞ்சமி நில மீட்புப் பற்றி இத்திரைப்படம் விரிவாகப் பேசுகிறது. அதுகுறித்த விவாதத்தை வெகுமக்கள் மத்தியில் தொடங்கி வைக்கிறது. ஆதித்தமிழ் குடிகளும் மற்றவர்களைப் போல சரிசமமாக எல்லாவித உரிமைகளையும், வாய்ப்புகளையும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள்கூட நிலங்களை ஒதுக்கி நமது மக்களின் நிலையை மாற்ற எண்ணினார்கள்.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என சமூகத்தின் ஆழ்தளத்தில் அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காகவும் தன் வாழ்நாளெல்லாம் போராடினார். தனது அமைச்சர் பதவியைத் துறந்தார். பஞ்சமி நில மீட்புக்காகக் குரல்கொடுத்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் வழியில் நின்று எங்கள் ஐயா நடராஜன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அண்ணன் வினோத் போன்றவர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆனாலும், இந்த ஆட்சியாளர்கள் அதுகுறித்து எதுவும் பேசுவதில்லை. ஏனெனில், பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பதே இவர்கள்தான். இதையெல்லாம் கண்டு கொதிப்படைந்த ஒரு கூட்டம் அதிகாரத்தை நோக்கி வேகவேகமாக விரைந்து வருகிறது. இந்த ஆட்சியும், அதிகாரமும் சாதி மதம் கடந்து தமிழனாக ஒன்று சேர்ந்து இருக்கிற இளைய தலைமுறைப் புரட்சியாளர்களிடம் சிக்கும்போது அதிகாரத்தை காட்டி மிரட்டி, பிடுங்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டப் பஞ்சமி நிலங்கள் யாவும் மீட்கப்பட்டு உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த உறுதியைத்தான் இத்திரைப்படம் நமக்குள் ஏற்படுத்துகிறது.

Asuran movie scenes
அசுரன் படக்காட்சி

படம் ஒவ்வொருக் காலக்கட்டத்திலும் ஒரு அரசியலைப் பேசுகிறது. குடிசையை எரிக்கும் கீழ்வெண்மணி காலக்கட்டத்தில் அநீதிக்கு எதிராகப் போராடுகிற சிவப்புத் துண்டாகட்டும்! எண்பதுகளில் காலில் விழுகிற சிவசாமியைக் கைப்பிடித்து தூக்குகிற கருப்புச்சட்டை ஆகட்டும்! இறுதிக்காட்சியில், சிவசாமி பேசுகிற தமிழின ஓர்மையை விதைக்கிற தமிழ்த்தேசியக் கேள்வியாகட்டும். அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல் சிந்தனைக் குறியீட்டு அம்சங்களால் மாபெரும் சமூகப் புரட்சியின் சாட்சியமாக அசுரன் உருவாகி இருக்கிறான்.

'காடு இருந்தா புடிங்கிக்கிடுவானுவோ! ரூபா இருந்தா எடுத்துக்கிடுவானுவோ! படிப்பை மட்டும் எடுத்துக்க முடியாது சிதம்பரம்! படிச்சு நீ பெரியாளா வரும்போது அவனுவோ நமக்கு செஞ்சத நீ யாருக்கும் செஞ்சிராத' என்று நிறைவுறும் அந்த இறுதிக்காட்சியின் மூலம் தமிழ்த்தேசிய இன மரபிலேயே இயல்பாகவே வாய்க்கப் பெற்றிருக்கிற அற உணர்ச்சியைத் தம்பி வெற்றிமாறன் உணர்வுபூர்வமாகப் பதிவு செய்து இருக்கிறான்.

'ஒரே நிலத்தில் வாழ்றோம். ஒரே மொழியைப் பேசுறோம். இது ஒன்னு போதாதா நாம ஒன்னா சேர?' எனும் கேள்வியின் மூலம் தமிழ்ச்சமூகத்தின் ஓர்மைக்கு விடை சொல்லும் அந்த உரையாடல் இன்றையக் காலக்கட்டத்தில் தமிழ்ச்சமூகத்துக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிற அரசியலை எவ்விதச் சமரசமுமின்றி இப்படம் பேசுகிறது.

இத்திரைப்படம் உருவாவதற்கு முன்னாலேயே இக்கதையை என்னிடம் நீ கூறியபோது, நான் அடைந்த பிரமிப்பைவிடத் திரைப்படம் பன்மடங்கு வியப்பையும், திகைப்பையும் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கானக் கூட்டங்களில் பல மணி நேரம் வியர்வை சிந்தி நான் விதைக்கிறக் கருத்துக்களை, ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக நீ நாடெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறாய் என்பதை இத்திரைப்படத்தின் வாயிலாக அறிந்து பெருமையும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் தம்பி!

இப்படிப்பட்ட சமூக நோக்கம் கொண்டத் திரைப்படத்தை துணிச்சலோடு தயாரித்து அதை முறையாக வெளியிட்டு, கடைக்கோடி தமிழன்வரை கொண்டு சேர்த்திருக்கிற என் ஆருயிர் அண்ணன் கலைப்புலி தாணுவை ஒரு தமிழ்மகன் என்ற முறையில் தலைவணங்கி அவருக்கு எனது நன்றியைச் செலுத்துகிறேன்!

இத்திரைப்படம் மூலம் அண்ணன் தாணுவை, கலைப்புலி என்று அழைப்பது எத்தகைய சாலப்பொருத்தமானது என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். இத்திரைப்படத்தைப் படைக்க தம்பி வெற்றிமாறனுக்கும், தம்பி தனுஷ்க்கும் வாய்ப்பளித்த அண்ணன் தாணுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! அவரது நிறுவனத்தைச் சேர்ந்த உறவுகளுக்கும், இத்திரைப்படத்தில் என் தம்பி வெற்றிமாறனோடு இணை இயக்குநராக பணியாற்றிய எனது உயிர் இளவல் ஜெகதீச பாண்டியனுக்கும், அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்!

உனக்கு தனிப்பட்ட அளவில் எனது பெருமித உச்சிமுகர்தல்கள் என் தம்பி. வெறும் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள் என்ற சொற்களின் மூலமாகப் போற்றிப் புகழ்ந்து இத்திரைப்படத்தின் புகழை சுருக்க விரும்பவில்லை.

இது அதற்கும் மேலே தமிழ்ச்சமூகம் எக்காலத்துக்கும் கொண்டாட வேண்டிய மாபெரும் திரைக்காவியம்!

புரட்சி எப்போதும் வெல்லும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Intro:Body:

அசுரன் திரைப்படம் உருவாவதற்கு முன்னாலேயே இக்கதையை என்னிடம் நீ கூறியபோது, நான் அடைந்த பிரமிப்பைவிடத் திரைப்படம் பன்மடங்கு வியப்பையும், திகைப்பையும் என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது.  பாராட்டுக்கள் என்ற சொற்களின் மூலமாகப் போற்றிப் புகழ்ந்து இத்திரைப்படத்தின் புகழை சுருக்க விரும்பவில்லை.



சென்னை: தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அசுரன் படத்துக்கு இயக்குநரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.