ETV Bharat / city

நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!

author img

By

Published : Aug 9, 2021, 11:31 AM IST

Updated : Aug 9, 2021, 12:16 PM IST

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஆகஸ்ட் 9) காலை 11.30 மணியளவில் வெளியிட்டுள்ளார்.

நிதிநிலை வெள்ளை அறிக்கை
நிதிநிலை வெள்ளை அறிக்கை

சென்னை: 2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தாக்கல்செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் நிதி செயல்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 120 பக்கங்கள் கொண்ட அந்த நிதிநிலை அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை, கடன் சுமை, கருவூலத்தில் உள்ள பணம், நிதி வருவாய் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை அறிக்கையில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்கு நானே முழுப் பொறுப்பு என்பதற்காக எனது பெயர் இடம்பெற்றுள்ளது. எங்களது இலக்கைத் தெரிவிப்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம். தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் கடமையாகவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம்" என்றார்.

நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!
நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்டார் பிடிஆர்!

வெள்ளை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • தமிழ்நாட்டில் இடைக்கால நிதிநிலை அறிக்கையின்போது மொத்த கடன் ஐந்து லட்சத்து 70 ஆயிரத்து 186 கோடி ரூபாயாக இருந்த‌து.
  • தமிழ்நாட்டில் பொதுச் சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளது.
  • கடனைச் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விழுக்காடு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.
  • தமிழ்நாடு அரசின் வருவாய் சரிந்துவிட்டது; வருவாய் பற்றாக்குறை 3.16 விழுக்காடாக உள்ளது. 2006 -11ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உபரி வருவாய் இருந்தது.
  • கடைசி ஐந்து ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் மூன்று லட்சம் கோடி ரூபாய் மின்சாரத் துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின் வாரியத்தை விட பீகார் மின் வாரியம் நல்ல நிலையில் உள்ளது.
  • போக்குவரத்து, மின் துறை ஆகியவை கடன் வாங்கும் நிலையில் எச்சரிக்கை சூழலில் உள்ளது.
  • வரி வருமான வளர்ச்சி உற்பத்தி வளர்ச்சியில் பாதியாக உள்ளது.

நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது இது முதன்முறையல்ல; 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்திலும் வெளியிடப்பட்டது நினைவுகூரத்தக்கது. 1996-2001 காலகட்டத்தில் திமுக ஆட்சியின் முடிவில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை எப்படி இருந்தது என 2001ஆம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் சி. பொன்னையன் சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார்.

அந்த வெள்ளை அறிக்கையில், திமுக ஆட்சியில் மாநில வளர்ச்சி சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.

இதையும் படிங்க: ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக: காய்களை நகர்த்தும் காங்கிரஸ்!

Last Updated :Aug 9, 2021, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.