ETV Bharat / state

திருவள்ளுவர் தினம் எப்பொழுது கொண்டாட வேண்டும்? ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது என்ன? - Governor RN Ravi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:04 PM IST

Governor RN Ravi: வைகாசி அனுசம் நாள் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் எனவும், ஆனால் அது உரிய முக்கியத்துவம் கொடுத்தே கொண்டாடப்படவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்என்ரவி புகைப்படம்
ஆளுநர் ஆர்என்ரவி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலமையில் "திருவள்ளுவர் திருநாள் விழா"(வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. ஆளுநர் ரவி தனது தலைமை உரையில், "தமிழ்நாட்டு ஆளுநராக பணியாற்றுவதால், திருக்குறளை ஆழமாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தது. திருவள்ளுவர் வாழ்க்கை பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கிறார். திருக்குறள் மிகவும் விரிவான தொகுப்பு மற்றும் அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு வாழ்க்கை முழுமைபெறுவது போல ஒரு ஒருங்கிணைந்த வாழ்வின் மிகப்பெரிய விரிவாக்கத்தைக் கொண்டது.

திருக்குறள் ஆன்மிக சித்தாந்த நோக்கத்துடனும் எழுதப்பட்டவை. சாதாரண மனித மனதால் திருவள்ளுவரையும் அவரது போதனைகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாது. நன்னடத்தை பற்றிய அவரது விளக்கம், ஆதிபகவான் மீதான முழு பக்தி, இணக்கமான குடும்பம் மற்றும் சமூகத்தை வலியுறுத்துவது, ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கிய விரிவான பரிந்துரைகள், துறவிகளுக்கு வழங்கிய கடுமையான அறிவுரைகள் போன்றவற்றை சுருக்கமாகவும், தெளிவாகவும் குறள் வடிவில் சாத்தியமாக்கியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

நான் இங்கு ஆளுநராக வீற்றிருப்பதைவிட திருவள்ளுவரின் சீடனாக, மாணவனாக அமர்ந்திருப்பதிலேயே பெருமை கொள்கிறேன். திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் எனக்கும் உணர்ச்சிமிகு தொடர்பு உண்டு. மின்சாரம், சாலைவசதி இல்லா காலத்தில் எனக்கு பள்ளி பருவத்தில் ஒரு லட்சியம் இருந்தது. பள்ளி பருவத்தில் திருவள்ளுவர் பற்றி முதன்முதலில் அறிந்தேன்.

1964 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று பள்ளி நூலகத்தில், இந்தி புத்தகம் ஒன்றில் பாரதத்தின் தென் கோடியில் ஒரு மஹான் இருந்தார். அவர் திருவள்ளுவர் என்று அதில் போடப்பட்டு அவர் எழுதிய குரளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. பலரும் இந்த மேடையில் உச்சரித்த குறள் அது. அது எனக்கு உத்வேகம் ஊட்டிய குறள் அதுதான்‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’.

திருக்குறள் புது அனுபவம்: கீதையை பள்ளி நாட்களில் படித்து மனப்பாடம் செய்துள்ளேன். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்கிற வரிகள் என் வாழ்க்கையில் பணிகளில் கடைபிடித்துள்ளேன். ஆனால், திருக்குறள் என் வாழ்க்கையில் வந்தப்பின் அது வேறு வகையில் என் வாழ்க்கையில் புது அனுபவத்தை தந்தது. அந்த காலத்தில் எனக்கு திருக்குறள் கிடைக்கவில்லை. தமிழகம் வந்தவுடன் எனக்கு கிடைத்த முதல் நூல் திருக்குறள்.

ஒவ்வொரு முறை திருக்குறளை வாசிக்கும்போதும் எனக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைத்தது. குறள் இரண்டடிதான். ஆனால், ஏராளமான பொருள் பதிந்தது. நான் குறளை வாசிக்க வாசிக்க எனக்கு அது தனிநபராக, குடும்பதலைவனாக வாழ்க்கையில் பல விஷயங்களை உணர்த்தியது. மன்னர்கள் கடவுள்கள் அல்ல, ஆட்சியாளர்கள் அவர்கள் மக்களுக்கு ஆற்றவேண்டிய பணிகள், சேவை, ஆட்சி செய்வது குறித்து திருக்குறள் சொல்கிறது.

வாழ்க்கையின் தொகுப்பு: திருக்குறள் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாக பார்க்கிறது. இது நூல் அல்ல வாழ்க்கையின் தொகுப்பு. வைகாசி அனுஷம், தமிழ் நாள்காட்டி திருவள்ளுவரை கொண்டாடுகிறது. இந்த விழாவை எடுத்ததன் மூலம் ஒரு சீடனாக என் குருவுக்கு அளித்த காணிக்கையாக இதை கருதுகிறேன்.

திருவள்ளுவர் தினம் : திருக்குறளை பலரும் பல்வேறு விதங்களில் மொழிப்பெயர்த்துள்ளனர். தத்துவார்த்த ரீதியாகவும், அறிவார்ந்த ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் அணுகியுள்ளனர். ஒவ்வொரு ரீதியிலும் வெவ்வேறு பரிமாணங்களை அளிக்கும் திருவள்ளுவர் இந்த புண்ணிய பூமியில் அவதரித்தற்கு நாம் பெருமை கொள்ளவேண்டும். வைகாசி அனுசம் நாள் திருவள்ளூவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும் ஆனால் அது உரிய முக்கியத்துவம் கொடுத்தே கொண்டாடப்படவில்லை.

நான் என்னால் முடிந்த அளவு ஒரு மாணவனாக, சீடனாக திருக்குறளை தமிழகத்திற்கு வெளியில் கொண்டு சேர்ப்பேன். திருக்குறள் உலகம் முழுவதிலும் மொழிப்பெயர்க்கப்பட வேண்டும். நமது பிரதமர் திருக்குறளை பெரிதும் போற்றுபவர். திருக்குறளை உலக பொது நூலாக மாற்றும் செயலை பிரதமர் நிச்சயம் செய்வார்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் ஆர்.கிர்லோஷ் குமார், ஐ.ஏ.எஸ்., ஆளுநரின் செயலாளர், முக்கிய பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், ஆன்மிக மற்றும் பண்பாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள், ஆய்வறிஞர்கள், கல்வியாளர்கள், பல்வேறு திருவள்ளுவர் சங்கங்களின் உறுப்பினர்கள், இந்திய அளவிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் (காணொளி வாயிலாக) பங்கேற்றனர்.

முன்னதாக, இதற்கு முன்பும் திருவள்ளுவர் தினத்தன்று ஆளுநர் ரவி, அவரது பதிவில் காவி நிறம் கொண்ட திருவள்ளுவர் பட்டத்தையும் பதிவிட்டிருந்தார். அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் காவி மற்றும் பூணூல் அணிந்த திருவள்ளுவரை படத்தைப் பதிவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் அழைப்பிதழில், வள்ளுவர் காவி உடையில், பூணூல் அணிந்திருந்தது போன்ற படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளப்பியுள்ளன.

இதையும் படிங்க: வாரண்ட் இருந்தும் டிக்கெட் எடுக்க வாக்குவாதம்.. பைக்கில் சென்ற ஓட்டுநருக்கு அபராதம்.. தமிழகத்தில் பரபரப்பு! - Tnstc Vs Police Department

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.