ETV Bharat / city

“யாரையும் இழப்பதற்கு அதிமுக விரும்பியது கிடையாது” - ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் ஒன்றிணைய சாத்தியமா?

author img

By

Published : Oct 16, 2022, 9:43 PM IST

Etv Bharat
Etv Bharat

யாரையும் இழப்பதற்கு அதிமுக விரும்பியது கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பொன்விழா நிறைவு ஆண்டில் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?என்பது குறித்தான ஒரு செய்தி தொகுப்பைக் காணலாம்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் 50 வது பொன்விழா நிறைவு ஆண்டில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிளவு: திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர், 1972-ல் அக்.10ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது சொந்த கட்சியினர் மீது ஊழல் புகார் இருப்பதை சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக அக்.10ஆம் தேதி எம்ஜிஆர், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக செய்திகள் வந்தன. அப்போது எம்ஜிஆர் வீட்டில் தொண்டர்கள் அதிகளவில் வரத்தொடங்கினர். தொடர்ந்து, அக்.14ஆம் தேதி அதிமுகவில் இருந்து எம்ஜிஆர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்தபடி முதலமைச்சர்: அப்போது கட்சி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் எம்ஜிஆர்-க்கு இல்லை. ஆனால், தொண்டர்களின் எழுச்சியைக் கண்டு அக்.17, 1972ஆம் ஆண்டு 'அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்தார். இக்கட்சியை தொடங்கிய சில மாதத்தில் 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் வருகிறது. இதில், மாயத்தேவர் என்பவரை வேட்பாளராக நிறுத்தி, அமோக வெற்றி பெற்றார். கருணாநிதியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

அன்றில் இருந்து எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அதிமுகவிற்கு தோல்வியே கிடையாது. அவரது, மறைவிற்கு பிறகுதான் கருணாநிதியால் ஆட்சி அமைக்க முடிந்தது. இவரது, ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் மற்றும் சத்துணவு திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் படுத்துக்கொண்டே முதலமைச்சர் ஆன பெருமை எம்ஜிஆரையேச் சாரும்.

ஓபிஎஸ் புகைப்படம் இல்லாத ஈபிஎஸ் தரப்பு வைத்தப் பேனர்.. அதிமுக தலைமை அலுவலகத்தில்..
ஓபிஎஸ் புகைப்படம் இல்லாத ஈபிஎஸ் தரப்பு வைத்தப் பேனர்.. அதிமுக தலைமை அலுவலகத்தில்..

எம்ஜிஆரின் மறைவும் - அதிமுக பிளவும்: எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அப்போது எம்ஜிஆரின் மனைவி ஜானகியும், ஜெயலலிதாவும் இரு அணிகளாக பிரிகின்றனர். இதனால், 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 'இரட்டை இலை சின்னம்' முடக்கப்பட்டு, இருவரும் தனித்தனியாக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதில் கருணாநிதி தலைமையிலான திமுக வெற்றி பெறுகிறது.

இதில், ஜானகியை விட அதிமுக வாக்குகளை பெற்று முதல் முதலாக ஒரு பெண் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஜானகி, கட்சி முழுவதையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைதார். மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை வென்று முதல் முறையாக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றார்.

ஜெயலலிதா-திருநாவுக்கரசர் மோதல்: 1996ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதாவிற்கும், அப்போது அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த திருநாவுக்கரசருக்கும் இடையே உட்கட்சி மோதல் வெடித்தது. அப்போது அதிகப்படியான பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்தநிலையில், திருநாவுக்கரசர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஜெயலலிதா நீதிமன்றத்தை நாட, பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வந்தது.

அதிமுகவில் திருநாவுக்கரசர் செயல்பாடுகள்..
அதிமுகவில் திருநாவுக்கரசர் செயல்பாடுகள்..

ஏனென்றால் அதிமுகவின் சட்டவிதிப்படி அடிமட்ட தொண்டன் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும் என எம்ஜிஆர் வகுத்திருந்தார். அப்போது தொண்டர்களால் ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் ஆளுங்கட்சியாகவும், 1991, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டார்.

ஜெயலலிதா மறைவும்-மீண்டும் அதிமுக பிளவும்: கடந்த 2016 தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிச.5 ஆம் தேதி இரவு மறைந்தார். இதன் தொடர்ச்சியாக, அன்று இரவு ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் இருக்கும் ஒருசில அழுத்தம் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார்.

அப்போது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக அறிவித்து சென்றுள்ளார். ஜெயலலிதா மறைந்ததால் ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் வருகிறது. இதில், ஓபிஎஸ் தரப்பினர் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் ஈபிஎஸ் ஒரு அணியாகவும் செயல்பட்டதால் இரட்டை இல்லை மீண்டும் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. பின்னர் அதிமுக அம்மா அணி என்றும், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி என்றும் இருவரும் தனித்தனியாக சுயேட்சை சின்னத்தில் தேர்தல் களம் கண்டனர்.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் மோதலும்..தலைமை அலுவலகம் சீல் வைப்பும்..
ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் மோதலும்..தலைமை அலுவலகம் சீல் வைப்பும்..

இந்த இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகம் நடந்திருப்பதால் தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் டிடிவி தினகரன் இரட்டை இலை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிறை சென்றார். பின்னர், சிறையில் இருந்து விடுதலையாகி வரும்போது களம் மாறி இருந்தது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழு நடத்தி, தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கிவிட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கி செயல்பட்டு வந்தனர். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் நாள்கள் நகர்ந்து, இறுதியாக ஆட்சியை நிறைவு செய்தனர்.

இரட்டை தலைமையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக: 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இரட்டை தலைமையில் அதிமுக தேர்தலை சந்தித்தது. அதிமுக 65 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சியை இழந்தது. அதிலிருந்து மற்ற கட்சிகள் நாங்கள் தான் எதிர்க்கட்சிகள் என்று கூறும் அளவிற்கு அதிமுக பலவீனம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, பொதுக்குழு தொடர்பான ஆலோனைக் கூட்டத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒற்றை தலைமைக்கான கோஷம் எழுப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் மோதல்..
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் மோதல்..

ஈபிஎஸ் அணி-ஓபிஎஸ் அணி: இதனால் வரும் அக்.17ஆம் தேதி அதிமுக பொன்விழா நிறைவு ஆண்டில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணி என்று மீண்டும் பிளவுபட்டன. இதன் தொடர்ச்சியாக, ஓபிஎஸ்சின் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன், ஈபிஎஸ் அணியில் இருந்து தொடர்ந்து சாமதான பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிவித்தார். இந்த கருத்து மீண்டும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு என அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

மீண்டும் பேச்சுவார்த்தையா? இதுகுறித்து பேசிய ஈபிஎஸ் ஆதரவாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “யாரையும் இழப்பதற்கு அதிமுக எந்த காலத்திலும் விரும்பியது கிடையாது. ஓபிஎஸ் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இணைப்பிற்கான முயற்சியை முன்னாள் அமைச்சர் தங்கமணி எடுத்தார். தற்போது இணைப்பு குறித்து கட்சிதான் முடிவு செய்ய முடியும். அனைத்து விதமான, கதவையும் திறந்து வைத்திருந்தோம். ஆனால், அதை அவர்கள் பயன்படுத்தி கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக மோதல் - 'இரட்டை இலை’ சின்னம் முடக்கப்படுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.