ETV Bharat / city

அதிமுக மோதல் - 'இரட்டை இலை’ சின்னம் முடக்கப்படுமா?

author img

By

Published : Jul 14, 2022, 5:06 PM IST

அதிமுக
அதிமுக

ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுக இரண்டு அணிகளாக உடைந்து, ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்ட நிலையில், கட்சி தங்களுக்குதான் சொந்தம் என இபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்பினரும் மோதி கொண்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக 'இரட்டை இலை சின்னம்' யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுமாதிரியான விவகாரங்களால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை விரிவாக காண்போம்.

இரட்டை இலை சின்னம் எத்தனை முறை முடக்கப்பட்டது?: இதுவரை இரண்டு முறை அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. முதலில் 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணம் அடைந்ததால் ஜெயலலிதாவின் தனி அரசியல் தீவிரமானது. மேலும் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி (ஜா.ஜெ அணிகள்) என இரு கோஷ்டிகளாகப் பிரிந்தது அதிமுக. அதனைத் தொடர்ந்து முதலமைச்சரான ஜானகி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், பெரும் ரகளையாகி, ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. அதிமுக இரண்டுபட்டதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

இரண்டாவதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, 2017 ஆம் ஆண்டு சசிகலா-ஓபிஎஸ் என்ற இருவேறு அணிகளால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கத்துக்கு ஆளானது. ஒரு பக்கம் ஓபிஎஸ் அணியினர் சின்னமும், கட்சியும் எங்களுக்குத்தான் எனக் கூறிய நிலையில், மற்றொரு பக்கம் சசிகலா தரப்பு உரிமை கொண்டாடியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையேயான ஒற்றை தலைமை விவகாரம்
அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையேயான ஒற்றை தலைமை விவகாரம்

இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்படுமா?: தற்போது தொண்டர்களின் உதவியோடு இரட்டை இலை சின்னத்தை தங்களது பக்கம் கொண்டுவர நீதிமன்றத்தை நாடுவோம் என ஓபிஎஸ் கூறியுள்ள நிலையில், தேர்தல் வரும் போது இரு அணிகளாக அதிமுக பிரிந்து நின்றால் கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட வாய்ப்புள்ளது என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அதிமுக பொதுக்குழுவின் போது மோதலில் ஈடுபட்ட அதிமுகவினர்
அதிமுக பொதுக்குழுவின் போது மோதலில் ஈடுபட்ட அதிமுகவினர்

மேலும் ஒரு கட்சியில் இரு தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டால் பெரும்பான்மை நிர்வாகிகள் உள்ள கட்சிக்கு அதன் சின்னமும், மற்றொரு தரப்பினருக்கு வேறொரு சின்னமும் ஒதுக்கலாம். அதே சமயம், இரு தரப்பினரும் சம பலத்துடன் இருந்தால் அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

அரசியல் ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள்?: அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "1987 ஆம் ஆண்டு நடந்த ஜானகி-ஜெயலலிதா (ஜா.ஜெ அணிகள்) அணிகளால், அதிமுகவின் சின்னம் முடக்கப்பட்டது. இதே போல தற்போது சின்னத்தை முடக்க வாய்ப்புள்ளது. இரண்டாவதாக 2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னத்தை மீட்க முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனான அகிலேஷ் யாதவுக்கும் கடும் போட்டி நிலவியது.

அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ரகளை
அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் ரகளை

சைக்கிள் சின்னத்தை கோரிய முலாயம் சிங்கின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. மேலும், அகிலேஷ் யாதவுக்கு அதிக ஆதரவாளர்கள் இருந்ததால் தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது", என தெரிவித்த அவர், இந்த முகாந்திரத்தை வைத்து பார்க்கும் போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை இ.பி.எஸ்ஸுக்கு ஒதுக்கலாம் என கூறினார்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

இது குறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் சிவசங்கரி ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "எங்களது தலைவர் இ.பி.எஸ்ஸுக்கு 99 விழுக்காடு ஆதரவாளர்கள் உள்ளனர். எனவே, கட்சியும் எங்களுக்குத்தான். சின்னமும் எங்களுக்குத்தான்", என தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.