ETV Bharat / city

அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்த விவகாரம்: இருதரப்பினரும் ஆஜராக நோட்டீஸ்

author img

By

Published : Jul 11, 2022, 9:53 PM IST

அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் இருதரப்பினரும் வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்த விவகாரம்: இருதரப்பினரும் ஆஜராக நோட்டீஸ்
அதிமுக தலைமையகத்திற்கு சீல் வைத்த விவகாரம்: இருதரப்பினரும் ஆஜராக நோட்டீஸ்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், வானகரத்தில் ஈ.பி.எஸ் தலைமையில் இன்று காலை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லாமல் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

ஓபிஎஸ் தலைமை கழகத்திற்கு வருவதை முன்கூட்டியே அறிந்து இருந்த ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 300 க்கும் மேற்பட்டோர், ஓபிஎஸ் வருவதற்கு முன்னதாகவே தலைமை கழகம் முன்பு ஒன்று கூடினர். பின்னர் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர் ஓ.பி.எஸ்ஸை தலைமைகழகத்திற்குள் செல்லவிடாமல், சாலையில் கிடந்த கற்களை கொண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்டை மற்றும் கற்களை வீசி மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதி போரகளமாக காட்சியளித்தது. இத்தாக்குதலில் அதிமுகவினர் மற்றும் 2 காவலர்கள் உட்பட 44 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் ஆயிரம் விளக்கு அதிமுக பகுதி செயலாளர் பாசறை பாலசந்திரன் உட்பட 14 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டியிருந்த அதிமுக தலைமைக்கழக கதவுகளை உடைத்து உள்ளே சென்று அதிமுக தலைமைகழகத்தை கைப்பற்றினர். அந்த பகுதி முழுவதும் கலவரமாக மாறியதால் மயிலாப்பூர் துணை ஆணையர் தீஷா மிட்டல் மற்றும் திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து காயமடைந்த அதிமுகவினர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ஏழு பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் தகவலின் பேரில் மயிலாப்பூர் வருவாய் வட்டாச்சியர் சாய் வர்தினி, கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் இணை ஆணையர் பிரபாகரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை சீல் வைக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து வட்டாட்சியர் சாய் வர்தினி தலைமையிலான அலுவலர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்று ஓ.பி.எஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி 146 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி தலைமை அலுவலகத்தை சீல் வைக்க நோட்டீஸ் கொடுத்து அவரை அங்கிருந்து வெளியேற்றினர். அதிமுக தலைமை அலுவலகத்தை நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்து சென்றனர்.

இதனையடுத்து காவல்துறையினர் பேரிகார்டுகளை அமைத்து யாரும் உள்ளே செல்லாதவாறு அதிமுக தலைமை கழகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன் மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறா வண்ணம் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வரும் 25ஆம் தேதி இருதரப்பினரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வட்டாச்சியர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதையும் படிங்க: ஓ.பி.எஸ். நீக்கம் செல்லுமா? - சசிகலா பரபரப்பு கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.