ஓ.பி.எஸ். நீக்கம் செல்லுமா? - சசிகலா பரபரப்பு கருத்து!

author img

By

Published : Jul 11, 2022, 7:29 PM IST

Updated : Jul 11, 2022, 7:44 PM IST

தொண்டர்களும் மக்களும் என்னைத்தான் ஆதரிக்கின்றனர் - சசிகலா திட்டவட்டம்!

அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் தன்னை ஆதரிப்பதாக சசிகலா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை: இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லும்? அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இல்லை என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தொண்டர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.

பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது: திமுகவில் ஏற்பட்ட பிரச்னையால்தான், எம்ஜிஆர் தனிக்கட்சியைத் தொடங்கினார். இந்த நிலை தன்னுடைய கட்சிக்கும் (அதிமுக) வரக்கூடாது என நினைத்துதான், கட்சியின் அடிமட்ட தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை எம்ஜிஆர் கொண்டு வந்தார். ஆனால், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டமும், அங்கு நடைபெற்ற செயல்களும் அவ்வாறு நடைபெறவில்லை.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பது என்பதை, கட்சியின் தொண்டர்களும், அதிமுகவிற்கு வாக்களித்த மக்களும் ரசிக்க மாட்டார்கள். ஓபிஎஸ் நாடி வந்தால் அவரை இணைப்பது என்பது, காலம் வரும் சூழ்நிலையில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. ஒரு கட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, எம்ஜிஆர் தொண்டர்களிடம்தான் விட்டுள்ளார். எனவே, ஒட்டுமொத்த தொண்டர்களின் முடிவுதான் இறுதியானது. அம்முடிவு தான் வெற்றி பெறும்.

எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, கட்சியின் நிதிநிலை அறிக்கையை பொறுத்தமட்டில், அதனை பொதுக்குழுவில் அப்போதைய பொருளாளர்தான் வாசிப்பார். இவ்வாறு இருக்கும்போது, இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்ள முடியும்?

விரைவில் ஒரே அதிமுக: அதிமுகவின் தொண்டர்கள் யாரை நினைக்கிறார்களோ, அவர்தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக முடியும். இதுதான் எம்ஜிஆர் விட்டுச்சென்ற வழிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள். அதன்படிதான் இந்த இயக்கம் இயங்கும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. எங்களது கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் ஆதரிக்கின்றனர். அது, நான் செல்லும் சுற்றுப்பயணத்தின்போதே வெளிச்சமாக தெரிகிறது.

தற்போது நிழலுக்கான சண்டையைத்தான் செய்கின்றனர். நிஜம் என்னவென்று விரைவில் தெரிய வரும். அதேநேரம், பெங்களூருவிலிருந்து வெளியில் வந்தது முதல் நான் சொல்லிக்கொண்டு வருவது ஒரே கருத்துதான். அவர்களைப்போல், இன்று ஒன்று சொல்வது; நாளை மாற்றிச்சொல்வது என்பது இல்லை. நான் இல்லாத சமயத்தில், எங்களுடைய இயக்கத்தில் கருத்து வேறுபாட்டினால் பிரிந்து இருந்திருக்கலாம்.

ஆனால் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒரே அதிமுகவாக வெற்றி பெறுவோம்; ஆட்சி அமைப்போம். ஜெயலலிதா கூறும் ‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு, அவருடன் இருந்த தங்கையாக அதனை நான் நிறைவேற்றிக் காட்டுவேன்” என தெரிவித்தார்.

தொண்டர்களும் மக்களும் என்னைத்தான் ஆதரிக்கின்றனர் - சசிகலா திட்டவட்டம்!

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அஸ்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்

Last Updated :Jul 11, 2022, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.