ETV Bharat / bharat

‘மாநில அந்தஸ்து விவகாரத்தில் யாரும் குறுக்கு சால் ஓட்ட வேண்டாம்’ - அமைச்சர் லட்சுமி நாராயணன்

author img

By

Published : Dec 20, 2022, 6:40 AM IST

லட்சுமி நாராயணன்
லட்சுமி நாராயணன்

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரத்தில் யாரும் குறுக்கு சால் ஓட்ட வேண்டாம் எனவும் ஒருமித்த கருத்து இருந்தால் போராட வரலாம் இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்கள் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கருத்தரங்க அறையில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (டிசம்பர் 19) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், “புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் பொங்கி எழுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

முதலமைச்சர் ரங்கசாமி 2011ஆம் ஆண்டில் கட்சி தொடங்கிய போது மாநில அந்தஸ்து என்ற ஒற்றை கோரிக்கையாக வைத்து கட்சி தொடங்கி தான் ஆட்சி அமைத்தார். அதற்குப் பின் ஏற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும், நிதி கமிஷனில் புதுச்சேரியை இணைக்க வேண்டும், மாநில கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தான் ரங்கசாமி கூட்டணியில் இணைந்தோம்.

கடந்த ஆட்சியில் மாநில அந்தஸ்து வேண்டுமென்று போராடியது இல்லை. அதற்கு மாறாக அவர்கள் அமைச்சரவைக்கு அதிகாரம் வேண்டும் என்று தான் போராடினார்கள். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற கடந்த ஆட்சியில் ஏதாவது ஒரு முயற்சி எடுக்கப்பட்டதா?. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற ரங்கசாமியின் நல்ல முயற்சியை கொச்சைப்படுத்த வேண்டாம். ஒருமித்த கருத்து இருந்தால் தங்களுடன் இணைந்து போராடலாம். அப்படி இல்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் திண்ணை எப்போது காலியாகும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பது போன்று எதுவும் நடக்காது. மேலும் கூடுதல் வரிவிதித்து மக்களை சிரமத்திற்கு ஆளாக்க எங்கள் முதல்வர் விரும்பவில்லை. கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்றார் போன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் நடந்து கொள்கிறார். அவர் தொடர்ந்து இதே போன்று செயல்பட்டால் அவர் தொகுதி மக்களே அவரை எதிர்த்து போராடக்கூடிய நிலைமை ஏற்படும்.

எந்த வழியில்லாவது புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் ரங்கசாமி நினைக்கிறார். மாநில அந்தஸ்து சம்பந்தமாக யாரும் குறுக்கு சால் ஓட்ட வேண்டாம். விரைவில் ஆளுநரை சந்தித்து வலியுள்ளோம். சில அதிகாரிகள் அரசு உத்தரவை மீறி நடந்து கொள்கிறார்கள். ஆட்சியாளர்களை மீறி யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு பாபா திரைப்பட ரஜினிகாந்தின் ஸ்டைலில் பதில் சொல்வோம்” என எச்சரித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 61 இடங்களில் புதிதாக வாடகை அடுக்குமாடி குடியிருப்பு: அமைச்சர் முத்துசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.