ETV Bharat / bharat

'இது இன்னும் முடியவில்லை... பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்': பி.வி. சிந்து ஈடிவி பாரத்திற்கு பிரத்யேகப் பேட்டி!

author img

By

Published : Mar 4, 2022, 9:18 PM IST

“இது இன்னும் முடியவில்லை”; பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்- பிவி சிந்து இடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி!
“இது இன்னும் முடியவில்லை”; பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்- பிவி சிந்து இடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டி!

இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஈடிவி பாரத்திடம் அளித்த பிரத்யேகப் பேட்டியைக் கீழே படிக்கலாம்.

ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் எனத் தொடர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, அவரது பயிற்சிக்கு இடையில் ஈடிவி பாரத் செய்திகளுக்காக தொலைபேசி வாயிலாக பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

'டோக்கியோ ஒலிம்பிக்கின்போது மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது என எனது கோச் கூறினார். அந்த வார்த்தைதான் என்னை உந்தி தள்ளியது. இது இன்னும் முடியவில்லை. இனி வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்' என உற்சாகத்துடன் கூறுகிறார், சிந்து. அவரது கடினமான பயிற்சிக்கு இடையில் சில மணி நேரம் ஒதுக்கி நம்மிடம் பேசினார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பின்வருமாறு:-

கேள்வி: இரண்டு பதக்கங்களை வென்ற பிறகு என்ன மாதிரியான மாற்றங்கள் உருவானது?

பதில்: தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை வென்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால், பதக்கம் வெல்வது எளிதானது அல்ல என எண்ணிய எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்தது. மேலும் இந்த வெற்றி, என்னை அடுத்த கட்டத்திற்கு உந்தி தள்ளுகிறது.

கேள்வி: உங்கள் கனவு உங்களது சாதனைகளால் நிறைவேறியதா? உங்களின் தற்போதைய கனவு என்ன? உங்களை ஒவ்வொரு நாளும் பயிற்சிக்காக எந்த விஷயம் ஊக்கப்படுத்துகிறது?

பதில்: ஆம், எனது கனவுகள் நிறைவேறியுள்ளது. இருப்பினும், இது எனக்குப் போதாது. நான் செல்ல வேண்டிய தூரம் நீளமானது. இந்த வெற்றிகள் எனக்கு ஊக்கமூட்டுகின்றன. நான் முன்னோக்கி நகர்ந்து செல்கிறேன். மேலும் இந்த ஆண்டில் அதிகமான போட்டிகளில் விளையாட உள்ளேன். இந்த ஆண்டில் நிச்சயமாக நான் பதக்கங்களைப் பெறுவேன். எனது கனவுகளை அடைய இன்னும் அதிக தூரம் உள்ளது.

நீங்கள் எதையாவது அடைய வேண்டும் என்றால் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் 100 விழுக்காடு முயற்சி செய்ய வேண்டும். முதலிடத்திற்கு வர வேண்டுமானால் அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.

கேள்வி: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லாதது வருத்தமளிக்கிறதா?

பதில்: நான் முதல்முறையாகப் பதக்கம் வென்றபோது அந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. வெள்ளிப்பதக்கம் வெல்வது அத்தனை எளிதானது இல்லை. இந்நிலையில் அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் தொடர்ந்து பதக்கம் வென்றதும் எளிதானது இல்லை. ஏனென்றால், அரையிறுதியில் தோல்வி அடைந்ததும் வெண்கலத்திற்காகப் போட்டியிடும்போது அதிக அழுத்தம் இருந்தது. அதனை எதிர்கொண்டு பதக்கம் வென்று இருக்கிறேன். அந்த அழுத்தத்தின் விளைவாகப் பதக்கம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

நான் சிறப்பாக விளையாடினேன். என்றும் நான் தங்கத்தை இழந்ததில் வருத்தம் அடையவில்லை. இன்னும் ஒலிம்பிக் போட்டி வருகிறது. அதில் சிறப்பாக ஆடி, தங்கம் வெல்வேன். அதன்பிறகு அனைத்து பதக்கங்களையும் சொந்தமாக்கியவள், நான் தான்.

கேள்வி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு உங்களுக்குக் கிடைத்த சிறந்த பாராட்டு எது?

பதில்: அதிகமானோர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் வாழ்த்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அரையிறுதியில் தோற்றபிறகும் உறுதியாக விளையாடி வெற்றி பெற்றதற்குப் பாராட்டுகின்றனர். அது அவர்கள் கூறுவதை விட கடினமாக இருந்தது. எனது கோச் மூன்றாவது இடத்திற்கும் நான்காவதும் இடத்திற்கும் இடையே அதிக வித்தியாசங்கள் உள்ளது எனக் கூறினார், அதுவே என்னை உந்தி தள்ளியது எனக் கூறலாம்.

கேள்வி: நீங்க ஒரு ''Big Match Player"ஆமே! பெரிய போட்டிகளில் அப்படி என்னதான் நடக்கிறது?

பதில்: (சிறிது நேரம் சிரித்த பின்) நான் எல்லா போட்டிகளிலுமே கடுமையாகப் போட்டியிடுகிறேன். என்னை 'Big Match Player'ன்னு சொல்றதுல மகிழ்ச்சிதான். என்னுடைய ஒவ்வொரு போட்டியிலும் நான் ஒவ்வொரு யுக்தியில் விளையாடுகிறேன். எல்லா போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான பயிற்சியைத்தான் மேற்கொள்கிறேன். எந்தப் போட்டிக்கும் செல்லும் போது நாம் வென்று விடலாம் என்ற நிலைப்பாட்டுடன் செல்ல வேண்டும். நீங்கள் வெல்வீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களே வெல்வார்கள்.

கேள்வி: ஜப்பானிய வீராங்கனை அகானே யாமாகுச்சியை எதிர்கொள்வதில் எது சவாலாக இருந்தது?

பதில்: யாமாகுச்சியுடனான போட்டிகளுக்கு முன்னதாக இருந்தே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சீனா மற்றும் தாய்லாந்து வீராங்கனைகள் தான் மிகவும் சவால் கொடுத்தார்கள். நான் காலிறுதிக்காக மட்டும் தயாராகவில்லை. அதற்கு முன்னதாக இங்கிலாந்துப் போட்டிகள் அனைத்திலும் விளையாடி இருந்தேன். ஒவ்வொரு போட்டியும் எனக்கு முக்கியமானதாக இருந்தது.

கேள்வி: இனிவரக்கூடிய பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வீர்களா?

பதில்: ஆம், நான் நிச்சயமாகத் தங்கம் வெல்வேன். அதுதான் என் இலக்கு. தங்கம் பெறுவதற்கு நான் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னதாக எனக்குச் சில இலக்குகள் உள்ளன. அதனை நான் அடைய வேண்டும். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என எண்ணுகிறேன்.

கேள்வி: தற்போது உள்ள இளம் வீராங்கனைகளுக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்? இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட இது சரியான நேரமா?

பதில்:நான் விளையாடும் போட்டிகளில் அதிகமான இளம் வீரர்களைப் பார்க்கிறேன். அவர்கள் சிறப்பாகவும் விளையாடுகிறார்கள். சரியான பயிற்சி கிடைத்தால் அவர்கள் வெற்றி பெறுவதும் சாத்தியமாகும். ஓரிரு மாதங்கள் மட்டும் பயிற்சி பெறுவதால் பயனில்லை,வெற்றி பல ஆண்டு முயற்சியால் மட்டுமே கைகூடும். நீங்கள் நன்றாகச் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். அதற்கேற்ப கடினமாக உழைக்க வேண்டும்.

என தனது பேட்டியை முடித்துக்கொண்டார், பி.வி. சிந்து. அவருக்கு வெற்றி வாகை சூட வாழ்த்துகள்!

இதையும் படிங்க:VK 100: 'இலங்கைக்கு தண்ணி காட்டிய இந்தியா'; தொடரும் விராட்டின் துரதிர்ஷ்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.