ETV Bharat / bharat

மங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 4:07 PM IST

bomb-threat-security-check-carried-out-at-mangaluru-international-airport
மின்னஞ்சல் மூலம் மங்களூர் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Mangaluru International Airport Bomb Threat: மங்களூர் விமான நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக பாஜ்பே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் (டிச.27) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மங்களூர் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மின்னஞ்சல் முகவரி மூலமாக மிரட்டல் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மிரட்டல் செய்தியில், “விமானம் ஒன்றில் வெடிபொருட்கள் உள்ளது. அது சில மணி நேரத்தில் வெடித்துவிடும். உங்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன். நாங்கள் ஃபன்னிங் (Funning) என்ற பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் செய்தி டிசம்பர் 27ஆம் தேதி அன்று காலை 11.20 மணிக்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மின்னஞ்சல் மிரட்டல் தொடர்பாக மாநகர காவல் துறை ஆணையர் அனுபம் அகர்வால் கூறும் போது, "மிரட்டல் செய்தியைத் தொடர்ந்து, தற்போது விமான நிலையத்தில் வெளிப்புறம் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பின்பே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும், ASC மற்றும் (வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்கும் குழு) BDDS மூலம் வாகனங்கள் சோதனை ஆகியவை உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.

மிரட்டல் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு, விமான நிலைய அதிகாரி தரப்பில் பாஜ்பே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் போரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு விமான நிலையத்துக்கு சமூக வலைத்தளமான X மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. மேலும் இதனை பெங்களூரு விமான நிலையத்தில் X வலைத்தளப் பக்கத்தில் டக் (Tag) செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலில் பெங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வீசுவேன் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணம்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.