அரசு அதிகாரிகளை உருவாக்க வாத்தியாராக மாறிய விஏஓ! டிஎன்பிஎஸ்சிக்கு இலவச பயிற்சி அளித்து அசத்தல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 9:03 AM IST

thumbnail

கோயம்புத்தூர்: இன்றை இளைஞர்கள் பலருக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், போதிய பணம் வசதி இல்லதா காரணத்தால் பல இளைஞர்கள் பயிற்சி மையங்களுக்கு செல்லாமல், தாங்களாகவே படித்து, பயிற்சி பெற்றுத் தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர்.

சில சமயத்தில், இப்படி செய்யும்போது சரியான முறையில் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், கிராமப்புற பட்டதாரிகள் பலருக்கும் அரசு வேலை என்பது எட்டா கனியாக உள்ளது.

இதனிடையே, தன்னுடைய அரசு பணியைப் பார்த்துக் கொண்டே கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவசமாக டி.என்.பி.எஸ்.சி (TNPSC) பயிற்சி வகுப்புகளை  எடுத்து வருகிறார், பொள்ளாச்சியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தன்னுடைய கடுமையான முயற்சியால் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி தற்போது பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்று வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் தனது அலுவலகத்தின் முன்பு, கல்லூரி மாணவர்கள் மற்றும் அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். இவர், கடந்த மூன்று வருடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளித்துள்ளார்.

இதில் பலர் தற்போது அரசு பணிகளில் பணியற்றி வருகின்றனர். இது குறித்து ரவிக்குமார் கூறுகையில், 'தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இதுபோன்று பல அரசு அதிகாரிகளை உருவாக்கி, நல்ல வழியில் பயணிக்க வேண்டும். இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்த என்னுடைய உயர் அதிகாரிகள் எனக்கு உறுதுணையாக உள்ளனர். இதனால், மனம் நிறைவாக உள்ளது' எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து நர்மதா என்ற மாணவி கூறுகையில், 'அரசு தேர்வுக்குத் தயாராவதற்கு மிக சிறப்பான முறையில் பயிற்சிகளை அளித்து வருகிறார். இதனால், என்னுடன் படிக்கும் சக மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். இதனால், தங்களது எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். மேலும், அரசு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது' என்றார்.

இந்நிலையில், தான் பெற்ற கல்வியறிவு மூலம் கிராமப்புற மாணவ மாணவிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக சேவையாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.