ETV Bharat / state

சேலத்தில் பாஜக பொதுக்கூட்டம்: 2 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு - மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 9:00 PM IST

மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்
மார்.19 சேலத்தில் பாஜக பொதுக்கூட்டம்,2 லட்சம் பேர் பங்கேற்பு

PM Modi visits Salem: சேலத்தில் வரும் மார்ச் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பாரதிய ஜனதா பிரச்சாரக் கூட்டத்தில், 2 லட்சம் பேர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

சேலம்: கெஜல்நாயக்கன்பட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் வரும் மார்.19 ம் தேதி நடைபெற உள்ள பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள மைதானத்தைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு, கிழக்கு மாவட்டத் தலைவர் சண்முகநாதன், சேலம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் நேற்று (மார்.12) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இது குறித்து, கே.பி.ராமலிங்கம் கூறுகையில், “சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் மார்.15 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த கூட்டம் மார்ச் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட மக்கள் மோடியை வரவேற்கத் தயாராகி விட்டனர்.

மற்ற கட்சிகளைப் போல் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே மாநாட்டு மேடை அமைப்பது, ஆட்களை அழைத்துச் செல்வது போன்ற ஏற்பாடுகள் எங்களுக்குத் தேவையில்லை. மூன்று நாட்களுக்குள் கூட்டம் நடத்த தயாராக இருந்த எங்களுக்கு, மேலும் மூன்று நாட்கள் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. மைதானத்திலேயே ஹெலிபேட் அமைக்கப்பட உள்ளது.

பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வரும் மோடி, மதியம் 1.30 மணிக்கு கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் சேலம், நாமக்கல், கரூர் மக்களவைத் தொகுதிகளின் வாக்காளர்களுக்கான பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றுப் பேச உள்ளார்.

இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்ப குழுக்கள் அமைக்கப்பட்டு பொதுக் கூட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த பொதுக்கூட்ட மைதானத்தை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் இருந்தனர்.

இதையும் படிங்க: வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் பாஜகவுடன் இணைந்தாக சமக தலைவர் சரத்குமார் பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.