ETV Bharat / state

வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும், தேச நலனுக்காகவும் பாஜகவுடன் இணைந்தாக சமக தலைவர் சரத்குமார் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 5:24 PM IST

Updated : Mar 12, 2024, 8:21 PM IST

Smk Merge With Bjp
Smk Merge With Bjp

Smk Merge With Bjp: வருங்கால இளைஞர்களின் நன்மைக்காகவும், தேச நலனுக்காகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Smk Merge With Bjp

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரைத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேல்நிலை பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவோடு சரத்குமார் இணைத்துக் கொண்டார்.

பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, "பாஜக குடும்பம் பெரிதாகி உள்ளது. சரத்குமாரின் ரசிகன் நான். நடிகராக மட்டுமல்லாமல் ஒரு மனிதராக வலம் வருபவர் நாட்டாமை அண்ணன் சரத்குமார். அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு தனித்துவம் உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் அறிக்கையை நான் விரும்பி படிப்பேன். மக்களுக்குத் தேவையானதை வலியுறுத்தும் வகையில் பேசுவோம். மற்ற கட்சிக்காரர்கள் எல்லாரும் பேரம் பேசுவார்கள். ஆனால், சரத்குமார் அப்படியில்லை. தான் வந்தால் மோடிக்கு என்ன லாபம், நாட்டுக்கு என்ன லாபம் என்று தான் கேட்டார்.

கனத்த இதயத்துடனும் துணிவோடும், பணிவோடும், அன்போடு கட்சியை இணைத்துள்ளார். பாஜக சொந்தங்கள் சமத்துவ மக்கள் கட்சியினரை இருகரம் கொண்டு வரவேற்கிறோம். சமத்துவ மக்கள் கட்சியினர் ஏன் இந்த முடிவை எடுத்தோம் என வருத்தப்படும் அளவிற்கு இம்முடிவு இருக்காது.

சரத்குமாருக்கு அனைத்து மதத்திலும் தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜக உடன் இணைந்துள்ளனர். பாஜக இவர்களுக்கு எதிரி என்பதை உடைக்க வேண்டும் என்பது நமது கடமை. வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் சரத்குமார் எடுத்திருக்கும் இம்முடிவு மிக முக்கியமானது என்றார்.

பின்னர், மேடையில் பேசிய சரத்குமார், "எத்தனை தொகுதி, என்ன திட்டம் என்பது மட்டும்தான் அரசியலா? மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்கிற பாதை தடைப்படுகிறதே என்கிற எண்ணம் தோன்றியது. பிரதமர் மோடியுடன் சேர்ந்து வலிமையாகச் செயல்பட்டால் என்ன என்கிற எண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்தேன்.

இது சமகவின் முடிவல்ல. மக்களுக்கான முடிவு. ஒரு எழுச்சியின் தொடக்கம். பெருந்தலைவர்களைப் போன்று ஒரு ஆட்சி அமைவதற்கான தலைவராகப் பிரதமர் மோடி உள்ளார்.

இதையும் படிங்க: பரமக்குடியில் இந்து பெண் துறவி தாக்குதல் வழக்கில் திடீர் திருப்பம்; வதந்தி பரப்பிய உ.பி., பெண் மீது வழக்குப்பதிவு!

Last Updated :Mar 12, 2024, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.