ETV Bharat / state

ஒரு வாரத்தில் இலங்கை செல்லும் முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், முருகன்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன? - Srilankan passport to Murugan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 12:29 PM IST

Updated : Mar 26, 2024, 12:57 PM IST

Etv Bharat
Etv Bharat

Srilankan passport to Murugan: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு இலங்கை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், ஒருவாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதால் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், லண்டனில் உள்ள தனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என்பதால், தனக்கு உரிய அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும், மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் எனத் தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறினார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்தியக் குடியுரிமை.. மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Last Updated :Mar 26, 2024, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.