ETV Bharat / state

இன்று மதியம் சென்னை வரும் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 12:00 PM IST

PM Modi Visit Chennai Today
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

PM Modi Visit Chennai Today: சென்னையில் நடைபெறவுள்ள அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று (மார்ச் 4) பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில், அவரின் பயணத்திட்டம் காரணமாக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இன்று (மார்ச் 4) தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் உள்நாட்டு முன்மாதிரி வேக ஈனுலை திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக இன்று (மார்ச் 4) இந்திய விமானப்படையின் தனி விமானத்தில், மாகாராஷ்டிராவில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் பிரதமர் மோடி, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார். உடனடியாக பிற்பகல் 2.50 மணிக்கு,இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு கல்பாக்கம் சென்றடைகிறார்.

அதன் பின்பு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மாலை 3.30 மணியிலிருந்து, மாலை 4:15 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில், கல்பாக்கம் புதிய அணுமின் நிலையத்தில் ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர், மாலை 4.30 மணிக்கு, கல்பாக்கத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

அதைத் தொடர்ந்து, மாலை 5.15 மணியிலிருந்து, மாலை 6.15 மணி வரை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும், பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளார். இந்த பொதுக் கூட்டத்தில், பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்எம்சிஏ மைதானத்தைச் சுற்றி உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவ்வழி செல்லும் வாகன ஓட்டிகளின் சாலை பயணத்தை வேறு மார்க்கத்தில் மாற்றி அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி, ஒய்எம்சிஏ மைதானத்தில் இருந்து, காரில் புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலை வழியாக, மாலை 6.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.

பின்னர் அங்கிருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பட் விமான நிலையம் சென்றடைகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணத்திட்டம் காரணமாக, சென்னை பழைய விமான நிலைய பகுதியில் இன்று காலை முதலே பாதுகாப்பு பணியானது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், பிரதமரின் தனி விமானம் வந்து தரையிறங்கும் இடம், பிரதமர் பயணிக்க இருக்கும் தனி ஹெலிகாப்டர் வந்து நிற்கும் இடம் ஆகியவற்றை, நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதோடு சென்னை பழைய விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், பிரதமரின் தனி விமானம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பட் புறப்பட்டு செல்லும் வரையில், டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் பணிகளும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'திமுகவால் மத்தியில் ஆட்சி மாற்றம்..நரேந்திர மோடி சிறைக்கு செல்வது உறுதி' - ஆ.ராசா பரபரப்பு பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.