ETV Bharat / state

இலங்கை கைதி புஷ்பராஜா புழல் சிறையில் தாக்கப்பட்டாரா? -உறவினர் பரபரப்பு புகார் - Sri Lankan Prisoner Pushparaja Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 9:22 AM IST

Sri Lankan Prisoner Pushparaja: இலங்கை கைதி புஷ்பராஜா மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறை காவலர்கள் தாக்குவதாக, அவரின் அத்தை விஜயலட்சுமி சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தத் துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

Press conference photo of Pushparaja's aunt Vijaya Lakshmi
செய்தியாளர்கள் சந்திப்பில் புஷ்பராஜாவின் அத்தை விஜய லட்சுமி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு குணா என்கிற குணசேகரன், பூக்குட்டி கண்ணா என்கிற புஷ்பராஜா ஆகிய இரண்டு பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் என்பவரோடு இணைந்து போதை மருந்து மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக NIA அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, விசாரணை கைதியாக புஷ்பராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி புழல் சிறையில் கைதிகளை வரிசைப்படுத்தி அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கும் பணியில் அருண்ராஜ் என்ற சிறை காவலர் ஈடுபட்டபோது, கைதி புஷ்பராஜா சிறைக் காவலர் அருண்ராஜை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. அத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றதாக கூறி புழல் காவல் ஆய்வாளர் ராஜசிங், கைதி புஷ்பராஜா மீது வழக்குப் திவு செய்து விசாரித்து வருவதாக தெரிகிறது.

இந்த சூழலில், புழல் மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக உள்ள புஷ்பராஜாவை தனிமை சிறைப்படுத்தி மனித உரிமை மீறல் நடத்தப்பட்டுள்ளதாகவும், சிறை போலீசார் புஷ்பராஜாவை தாக்கியதை மறைக்க அவர் சிறை காவலரை தாக்கியதாக பொய் வழக்குப்பதிவு செய்து சித்திரவதை செய்வதாகவும் புஷ்பராஜாவின் அத்தையான விஜயலட்சுமி என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், புஷ்பராஜா மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவரை சித்திரவதை செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜய லட்சுமி எழும்பூரில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தத் துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, "என்னுடைய அண்ணன் மகன் புஷ்பராஜா விசாரணை கைதியாக சிறைச்சாலையில் உள்ளார். அவரை அருண்ராஜ் என்ற சிறை காவலர் தொந்தரவு செய்து வருகின்றார்.

தண்டனை என்று கூறி சிறு அறையில் அடைத்து, உணவு மற்றும் மருந்து எதுமே கொடுப்பதில்லை. புஷ்பராஜாவுக்கு அடுத்த மாதம் ஜாமீன் கிடைக்க இருந்த நிலையில், காவலரை தாக்கியதாக அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனிப்பட்ட முறையில் காவலர்களுக்கு ஏன் புஷ்பராஜா மீது இவ்வளவு கோபம் என்று புரியவில்லை.

யாராவது பணம் கொடுத்து புஷ்பராஜாவுக்கு எதிராக இப்படி செயல்பட சொல்கிறார்களா என்றும் தெரியவில்லை.
ஆகவே, தமிழக முதலமைச்சரும், சட்டத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தை உடனடியாக தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

புஷ்பராஜா சிறையில் உள்ள தவறுகளை தட்டி கேட்பதாலும், மேலதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் சிறைத் துறை மனித உரிமை மீறல் தொடர்பாக புகார் கொடுத்ததாலும், இந்த பொய் வழக்கை அவர் மீது பதிவு செய்துள்ளனர்" என்று விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திடீரென போலீஸ் உயர் அதிகாரிகளைச் சந்தித்த சவுக்கு சங்கரின் தாயார்? காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.