ETV Bharat / state

‘சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கேரண்டி’.. முற்றும் போஸ்டர் மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 3:58 PM IST

பாஜகவை விமர்சித்து திமுகவினர் போஸ்டர்
கோவையில் பாஜகவை விமர்சித்து திமுகவினர் போஸ்டர்

DMK poster: கோவையில் திமுக சார்பில், மத்திய அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டும், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் விதமாகவும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பேசுபொருளாக மாறியுள்ளது.

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகள் அதிக இடத்தில் வெற்றி பெறுவதற்கு முயற்சித்து வருகின்றன. குறிப்பாக, போஸ்டர்கள் மூலமாக ஒவ்வொரு கட்சியினரும் எதிர்கட்சியினரை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மத்திய பாஜக அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை பட்டியலிட்டும், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை விளக்கும் விதமாகவும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மத்திய பாஜக அரசை விமர்சித்து, திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், ’சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கேரண்டி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அதில், கருப்பு பணம் மீட்பு, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, அனைவருக்கும் சொந்த வீடு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் உள்ளிட்ட பொய் வாக்குறுதிகள் மற்றும் சென்னை வெள்ள நிவாரண நிதி வழங்காததை விமர்சித்தும், பாஜக நிறைவேற்றாத வாக்குறுதிகளை வடை என விமர்சித்தும், வடிவேலுவின் கார்ட்டூன் படத்துடன் அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதேபோல், கோவையில் பாஜகவினர் திமுக ஆட்சியை குடும்ப ஆட்சி என விமர்சித்து போஸ்டர் ஒட்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக “ஆமா குடும்ப ஆட்சிதான் தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி” என தலைப்பிடப்பட்டு, தமிழக அரசின் நான் முதல்வன், உரிமைத் தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள மகள், மகன், அம்மா உள்ளிட்டோருக்கு தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

முன்னதாக கோவையில், “எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை. அவரை கண்டா வரச் சொல்லுங்க” என்ற தலைப்பில் திமுகவை விமர்சித்து அதிமுவினர் போஸ்டர்களை ஒட்டினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுகவினர், “தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை, கண்டா வர சொல்லுங்க” என போஸ்டர்களை ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பாஜகவினர் திமுகவை விமர்சித்து “வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா?” என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டினர். தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக, திமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் பெயரில், “சுத்தமான உளுந்துல செஞ்ச வடைக்கு நான் கியாரண்டி” என்றும் “ஆமா குடும்ப ஆட்சி தான் தமிழ்நாட்டு குடும்பங்களின் ஆட்சி” என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.4778.26 கோடி நிதி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.