ETV Bharat / state

புதுக்கோட்டை விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 11:52 AM IST

புதுக்கோட்டை விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
புதுக்கோட்டை விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Petrol bomb in VCK protest: புதுக்கோட்டை அருகே விசிகவினர் போராட்டத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதைக் கண்டித்து, விசிகவினர் நள்ளிரவு வரை சாலைமறியல் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

புதுக்கோட்டை: அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த மழையூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன், மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்களால் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தைக் கண்டித்தும், பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்யக் கோரியும், விசிக சார்பில் நேற்று (பிப்.14) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மர்ம நபர்கள் சிலர் போராட்ட களத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் வயர்களை துண்டித்து, கூட்டத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இந்த பெட்ரோல் குண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் உள்ளிட்டோர் மீது விழுந்ததாகவும், அதில் இளமதி அசோகன் அணிந்திருந்த சேலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: “கலெக்டரை தூக்கினால்தான் தேர்தலில் ஜெயிக்க முடியும்”.. நெல்லை திமுக நிர்வாகி பேச்சால் பரபரப்பு!

அதன் பின்னர், இச்சம்பவத்தைக் கண்டித்து மழையூர் பேருந்து நிறுத்தம் முன்பு, புதுக்கோட்டை - கறம்பக்குடி இடையேயான சாலையில், பெட்ரோல் குண்டு வீசிய நபரை கைது செய்யக் கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனிடையே, புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையிலும் விசிகவினர் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில், தொடர்ந்து பல்வேறு இடங்களில் பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் கோஷங்களை எழுப்பினர். மேலும், மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, நள்ளிரவு ஒரு மணி வரை இந்த மறியல் போராட்டம் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர், பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளித்த பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: தருமபுரியில் கூலி வேலைக்குச் சென்ற பட்டியலினப் பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் - இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.